புதின்: ‘அமெரிக்கா ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால் ரஷ்யாவும் தயாரிக்கும்”

பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்கத் தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருக்கிறார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கெனவே மீறிவிட்டது என செவ்வாய்க்கிழமை நேட்டோ குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து புதினின் இந்த கூற்று வந்துள்ளது.

1987ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலை தாக்குதல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்கா இந்த ஒப்பந்த்த்தை விட்டு வெளியேறுவதற்கான பூர்வாங்க குற்றச்சாட்டுதான் இதுவென புதின் தெரிவித்திருக்கிறார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

“தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. எனவே, இது போன்ற ஆயுதங்களையும் நாம் வைத்துகொள்ளலாம் என்று நமது அமெரிக்க பங்காளிகள் நம்புவதுபோல தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ஏவுகணை ஏவுதல்

“நமது பதில் என்ன? எளிதான பதில். அப்படியானால் நாமும் அவற்றை தயாரிப்போம்” என்று புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளால் இந்த ஒப்பந்த்த்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்று முன்னதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இலங்கை
இலங்கை

பாரம்பரிய படைப்பரிவுகளுக்கு இத்தகைய ஆயுதங்கள் மிகவும் செலவு குறைந்தவை என்று ரஷ்யா கருதுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேட்டோ சொன்னது என்ன?

சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சாவ் மற்றும் அமெரிக்க அதிபர் ரோன்ல்ட் ரீகன்
1987ம் ஆண்டு சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சாவ் (இடது) மற்றும் அமெரிக்க அதிபர் ரோன்ல்ட் ரீகன் இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக மேற்குலக நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோ செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

ரஷ்யா தயாரித்து ஏவுகணை அமைப்பு ஒன்றை அமைத்துள்ளதாக கூட்டணி நாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. இது இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இதனால் ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பு கணிசமான ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது என்று நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் அறிக்கை தெரிவித்தது.

ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்கிற அமெரிக்காவின் கூற்றுக்கு உறுப்பு நாடுகள் பலத்த ஆதரவு வழங்குகின்றன என்றும் ரஷ்யா விரைவாக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளவற்றை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

-BBC_Tamil