2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: கனிமொழிக்கு பிணை!

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நேற்று டில்லி மேல் நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஊழல் மோசடி விவகாரத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கடந்த மே மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக திஹார் சிறையில் இருந்து வந்தார். அவரது பிணை மனுக்கள் 4 முறை டில்லி பாட்டியாலா சி.பி.ஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் அவர் மீண்டும் பிணை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு மேல்நீதிமன்றம் நேற்று முன்தினம் பிணை வழங்கியது.

அவர்களுக்கு பிணை கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது பிணை மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து மேற்படி மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையையடுத்து கனிமொழிக்கு டில்லி மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.