மியான்மார் அமைச்சரைக் கண்டிக்கிறது பங்களாதேஷ்

மியான்மாரின் சமய அமைச்சர், அந்நாட்டு றோகிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துத் தொடர்பில், மியான்மார் தூதுவரை அழைத்த பங்களாதேஷ், தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அது கோரியுள்ளது.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, அவர்களில் 730,000க்கும் மேற்பட்டோர், பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த, மியான்மாரின் சமய அமைச்சர் துரா அங் கோ, பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள றோகிஞ்சாக்கள், மியான்மாருக்குத் திரும்புவதற்கு, பங்களாதேஷ் அனுமதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, இந்த அகதிகள், மூளைச்சலவை செய்யப்பட்டு, மியான்மாரை நோக்கிப் படையாகச் செல்லத் தூண்டப்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

அவரது இக்கருத்துக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதாக குறிப்பிட்ட பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சு, அவரது கருத்து, முஸ்லிம்களின் உணர்வுகளையும் பாதித்துள்ளது எனவும் தெரிவித்தது.

றோகிஞ்சா முஸ்லிம்களின் விவகாரம், அயல் நாடுகளான மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷிலுள்ள அகதிகளை, மியான்மாரில் குடியமர்த்த வேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் காணப்படுகிறது. ஆனால், மியான்மாரில் நிலைமைகள் சரியாகவில்லை எனத் தெரிவித்து, அங்கு செல்ல, அவர்கள் மறுத்து வருகின்றனர்.

இருந்த போதிலும், பங்களாதேஷின் நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் நாடுதிரும்ப மறுக்கிறார்கள் என, மியான்மார் குற்றஞ்சாட்டுகிறது.

-tamilmirror.lk