பிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி

பிரான்ஸில் எரிபொருள் உயர்வை கண்டித்து நான்காவது வாரமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து பிரதமர் இடுவா பிலீப் தேசிய ஒற்றுமையை மீட்டெடுப்பதாக உறுதி பூண்டுள்ளார்.

மஞ்சள் ஜாக்கெட் என்று அழைக்கப்படும் அந்த போராட்டம் பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராகவும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவுகள் அதிகரித்து வருவதற்காகவும் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் போலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தியதால் வன்முறை வெடித்தது.

இதுவரை பயன்படுத்தாத வகையில் சக்திவாய்ந்த வாயுவை கண்ணீர் புகைகுண்டுகளில் போலிஸார் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

போராட்டம் தொடர்பாக 1700 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையைக்காட்டிலும் இந்த வாரம் தீவிரமாக இருந்தது.

கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில், பாதுகாப்பு பணியில் சுமார் 65,000 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் அனால் இந்த வாரம் அந்த எண்ணிக்கை 89,000ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ்

“எந்த ஒரு வரியும் நமது தேசிய ஒற்றுமையை பாதித்துவிடக் கூடாது. தற்போது நாம் பேச்சுவார்த்தையின் மூலமும், பணியின் மூலமும், அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும்” என்று பிரான்ஸ் பிரதமர் பிலீப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிஸாரை பாராட்டி பேசியுள்ளார்.

சனிக்கிழமையன்று மக்ரோங் பாதுகாப்புப் படையினரின் தைரியத்துக்கும் அசாத்திய கடமை உணர்ச்சிக்கும் பாராட்டுக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று என்ன நடந்தது?

நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சுமார் 90,000 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர் பாரீஸ் நகரில் மட்டும் 8000 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதில் 12 கலவர தடுப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுமார் 10,000 பேர் போரட்டத்தில் ஈடுபட்டனர் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன கார்கள் கொளுத்தப்பட்டன.

இது “அதிதீவிர வன்முறையாளர்களால்” கையில் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரீஸ் நகரில் பல வருடங்களில் நடைபெறாத அளவு மோசமான போராட்டமாக கருதப்படும் இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

எரிபொருள் வரி உயர்வை தடுப்பதாக அரசு உறுதியளித்துள்ளது.மேலும் 2019ஆம் ஆண்டுக்கான மின்சாரம் மற்றும் எரிவாயுக்கான விலையை நிர்ணயித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் போராட்டம் மேலும் பல காரணங்களுக்காக விரிவடைந்தது.

விலை குறைப்புகள் அனைத்து போராட்டக்காரர்களையும் திருப்தி படுத்தவில்லை; சிலர் ஊதிய உயர்வு கோருகின்றனர், சிலர் வரிகளை குறைக்க விரும்புகின்றனர், சிலர் அதிக பென்ஷன்களை கோருகின்றனர், சிலர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான வாய்ப்புகளை எளிதாக்க கோருகின்றனர், சிலர் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் கோருகின்றனர்.

போராட்டக்காரர்களில் பலர் மக்ரோங் பணக்காரர்களுக்கான அதிபர் என்று தெரிவிக்கின்றனர். -BBC_Tamil