பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி, 2 மாதங்களுக்கு முன்னமே, தனது சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) அறிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
தனது சொத்து அறிவிப்பில், தன் பெயரில் இருக்கும் 2 கார்களையும் தான் குறிப்பிட்டதாகவும், ஆனால், எம்ஏசிசி வலைதளத்தில், சொத்துகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த இடம் காலியாகவே இருந்தது என்றும் அவர் சொன்னார்.
இதுபற்றி, எம்ஏசிசியிடம் தனது அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.
“காரை ஒரு சொத்து என்று எம்ஏசிசி கருத்தில் கொள்ளவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது, எனவேதான் அவ்விடம் வெறுமையாக இருந்தது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று, தன்னிடம் அறிவிக்கும் அளவிற்கு சொத்துகள் ஏதும் இல்லை என்று வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று, ஒரு சிலர் வேதமூர்த்தியுடன் தொடர்புபடுத்தி 2 கார்களைத் தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டனர்.
அவ்விரண்டு கார்களும், 10 ஆண்டுகள் நிறைந்த நிஸ்சான் கெஃபிரோ மற்றும் 6 ஆண்டுகள் கொண்ட தொயோத்தா கெம்ரி ஆகும்.