‘உலகெங்கும் அதிகார பீடங்களில் ஆண்கள் இருக்கிறார்கள்’ – இதை உங்களிடம் ஒரு பெரிய செய்தியாக சொன்னால், அதனை எப்படி அணுகுவீர்கள்? இது அனைவருக்கும் தெரிந்ததுதானே என்று சர்வசாதாரணமாக கடந்து செல்வீர்கள்.
இதே பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால்?
சரி. ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். பாலினப் பாகுபாடுகள் கலைய உலகெங்கும் செயற்பாட்டாளர்கள் போராடுகிறார்கள். ஆனால் பெண்கள் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதா?
அதிகாரத்தில் பெண்கள்
சில நாடுகள் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க முனைப்பாக செயலாற்றுகின்றன. உதாரணத்திற்கு ருவாண்டா நாட்டு அமைச்சரவையில் பெண்களுக்கு சரிசமான பங்கு வகிக்கிறார்கள்.
எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு அண்மையில் வழங்கினார். அதற்கான காரணமாக, “ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்” என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முகமது அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உலகெங்கும் இது போல, பல நம்பிக்கைதரும் எடுத்துகாட்டுகள் உள்ளன.
ஸ்லோவெனியா நாட்டு நீதிமன்றங்களுக்கு சென்று பாருங்கள். அங்கு ஆண் நீதிபதிகளின் எண்ணிக்கையைவிட பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம்.
நாம்பியாவில் செய்தி ஊடகங்களில் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர்.
மலேசியாவில் கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். நியூசிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் பத்தில் ஆறு பேர் பெண்கள். ஓமன் பொறியாளர்களில் பத்தில் ஐந்து பேர் பெண்கள்.
ஆண்களின் உலகத்தில் பெண்கள் அதிகாரத்தில் இருப்பது வரவேற்கதக்க ஒன்றுதான். இந்த தரவுகளை பார்த்து பிற நாடுகளும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நீதிபதிகளின் அதிகாரம்
பாலியல் புகாருக்கு உள்ளாகிய பிரெட் கவனா அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டது நம்மில் பலருருக்கு நன்கு நினைவிருக்கும். ஆனால், அவர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். இப்போது இது விஷயம் அல்ல – அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் எத்தனை பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என பார்ப்போம்.
அதிகாரமிக்க அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கும் 9 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் பெண்கள்.
பிரிட்டனில், அவர்கள் சட்ட அமைப்பு பொதுசட்டத்தை அடிப்படையாக கொண்டது. அங்கு நீதிபதிகளுக்கான நியமனம் அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும். சில சமயம் ஆண் ஆதிக்க அமைப்பின் அதிகரங்கள் நீதிபதிகள் நியமனத்திலும் ஆதிக்கம் செலுத்தும்.
பிரான்ச்ஸில் பத்தில் ஆறு நீதிபதிகள் பெண்கள். ஆனால், இதில் என்ன நகைமுரண் என்றால் அங்கு ஊதியம் குறைவு. வழக்கறிஞராக பணியாற்றினால், அவர்களால் அதில ஊதியத்தை பெற முடியும்.
- “என் மறுமணம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் சமூகப்பணி பதிலளிக்கும்” – உடுமலை கௌசல்யா
- ஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை – தந்தை வேதனை
சோவியத்துக்கு பின் உருவான நாடுகளில்தான் பெண் நீதிபதிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ரொமானியா, லாட்வியாவில் பத்தில் ஏழு நீதிபதிகள் பெண்கள்.
கம்யூனிச நாடுகளில் நீதிபதிகளுக்கு அதிகாரமும் இல்லை, ஊதியமும் இல்லை. இதற்கு மத்தியில் அவர்களுக்கு பல சித்தாந்த சிக்கல்களும் உள்ளது.
கிளர்ச்சிக்கு பிந்தைய சூழல்
மற்ற பணிகளில், ஒரு கிளர்ச்சி, போராட்டம் அல்லது கால மாற்றத்திற்கு பின்பே பெண்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றிருக்கிறது.
உதாரணத்திற்கு கம்யூனிச காலத்தில் பல்கேரியாவில், ஊடகத் துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1989ஆம் ஆண்டுக்குப் பின் ஊடக சுதந்திரம் மெல்ல வளர தொடங்கியது, படித்த பெண்கள் ஊடகத் துறையை தேர்ந்தெடுத்தார்கள். தலைமை பொறுப்புக்கும் வந்தார்கள்.
ருவாண்டாவில் பாலின ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு அங்கு நடந்த இனப்படுகொலைக்குப் பின் அரசு அமைப்புகள் முற்றாக சிதைக்கப்பட்டப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அங்கு பத்தில் 10இல் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள்.
ஆனால், அதே நேரம் இங்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது. பெண்கள் கணிசமான எண்ணைக்கையில் இருந்தாலும், அவர்களிடம் உண்மையாக அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விதான் அது.
ருவாண்டா தலைவர் பால், எதேச்சாதிகாரத்துடன் செயல்படுகிறார் என அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அதிகாரம் இருக்கிறதா?
நம்பிக்கையான விஷயம் என்னவென்றால் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதை பொதுசமூகம் ஏற்றுக் கொள்ளும் போக்கு அதிகரித்து இருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான். அதிகாரமிக்க இடத்தில் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் கைகளில் அதிகாரம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது, செய்தி துறையில் தலைமை பொறுப்பில் இருப்பது மட்டும் அதிகாரம் அல்ல.
ஆனால், மாற்றம் என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடுவது அல்ல. அதுவொரு நெடும் பயணம். நிச்சயம் இங்கு மாற்றம் உண்டாகும்.
-BBC_Tamil