பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்

கடோவிஸ்: சர்வதேச அளவில், வெப்ப உயர்வு, 2 டிகிரி செல்சியசுக்கு கீழே இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து உருவாக்கப்பட்ட, பாரிஸ் ஒப்பந்தத்தில் பின்பற்றப்பட வேண்டிய, பொது விதிகளை, 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இறுதி செய்துள்ளனர்.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருக்கத்தால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், இதனால், கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில், உலகளவில் வெப்ப அதிகரிப்பை, 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் இருக்கும் நோக்கில், பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை இறுதி செய்வதற்கான சிறப்பு கூட்டம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில், கடோவிஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, 200 நாடுகளின் பிரதிநிதிகள், ஒப்பந்த விதிகளை இறுதி செய்தனர்.

ஐ.நா., பருவநிலை மாற்ற ஒப்பந்த மாநாட்டின் தலைவர், மைக்கேல் குர்த்யக்கா பேசுகையில், ”பாரிஸ் ஒப்பந்த பணிகள், மிகப் பெரும் பொறுப்பு மிக்கதாக உள்ளன. இதற்கு, நீண்ட முயற்சிகள் செய்து விதிகளை வகுத்துள்ளோம்,” என்றார்.

-dinamalar.com