கிட் சியாங்: அம்னோ தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொண்டது

1எம்டிபி ஊழலுக்கு உடந்தையாக இருந்ததால்தான் அம்னோ இன்று ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகி இருக்கிறது என்கிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்.

“1எம்டிபி ஊழலிலும் பணச் சலவை நடவடிக்கைகளிலும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்து அம்னோ தலைவர்கள் தாங்களாகவேதான் இப்படிப்பட்ட அவமதிப்பையும் இழிவையும் தேடிக்கொண்டார்கள்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

அதற்காக இதுவரை எந்த அம்னோ தலைவரும் வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை என்று குறிப்பிட்ட லிம் அது நாட்டுக்கு அவர்கள் செய்த “கெடுதல்”, “துரோகம்” என்றார்.

குறிப்பாக நஜிப்பின் வலக் கரமாக இருந்த அஹமட் ஜாஹிட் ஹமிடி 1எம்டிபி ஊழலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

அந்த முன்னாள் துணைப் பிரதமர், நஜிப்பின் வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியனைப் போட்ட சவூதி அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தாம் நேரில் சந்தித்ததாகக்கூட கூறிக்கொண்டார்.

இப்போது ஜாஹிட் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு பொறுப்புகளைத் துணைத் தலைவரிடம் ஒப்படைத்திருந்தாலும் நஜிப் மற்றும் 1எம்டிபி ஊழல் விவகாரம் அம்னோ தலைவர்களை “விடாமல் விரட்டிக் கொண்டே இருக்கும்”, என்றார்.