குடியேற்ற பிரச்சனை : கூட்டணி கட்சி விலகல் – பெல்ஜியம் பிரதமர் மைக்கேல் ராஜிநாமா

குடியேற்றம் தொடர்பான பிரச்சனையை அடுத்து நாட்டின் ஆளும் முக்கிய கூட்டணி கட்சியொன்று விலகியுள்ளதை தொடர்ந்து தான் ராஜிநாமா செய்வதாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

தேசியவாத நியூ பிளெமிஷ் கூட்டணி (N-VA) என்ற அமைப்பின் ஆட்சிக்கான ஆதரவை அண்மையில் சார்லஸ் மைக்கேல் இழந்தார்.

கடந்த வாரத்தில் கையெழுத்தான குடியேற்றம் தொடர்பான ஐநா ஒப்பந்தம் ஒன்றுக்கு சார்லஸ் மைக்கேல் ஆதரவு அளித்த காரணத்தால், இக்கூட்டணி கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டது.

குடியேற்றம் தொடர்பான ஐநா ஒப்பந்தத்துக்கு பிரதமர் ஆதரவு அளித்ததை அடுத்து இது தொடர்பாக பிரஸல்ஸில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெல்ஜியம் அரசராக அழைக்கப்படும் பிலிப் அரசரிடம் தனது ராஜிநாமா முடிவை சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். அவரது ராஜிநாமாவை அரசர் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

தற்போது 42 வயதாகும் மைக்கேல், கடந்த 2014 அக்டோபரில் தனது 38-வது வயதில் பெல்ஜியத்தின் மிக இளைய வயது பிரதமராக பொறுப்பேற்றார். 1841-ஆம் ஆண்டு முதல் பெல்ஜியத்தில் பிரதமராக இருந்தவர்களில் இளையவர் மைக்கேல்தான்.

இது தொடர்பாக பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை நடந்த விவாதத்தை தொடர்ந்து தனது ராஜிநாமா முடிவை மைக்கேல் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பிரதமர் சார்லஸ் மைக்கேலின் ராஜிநாமா முடிவு நாட்டில் விரைவாக தேர்தல் நடக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. -BBC_Tamil