சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர்.
சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிரியாவில் ஒரு ராணுவ வெற்றிடம் ஏற்பட்டால் தங்களது அமைப்பு “எதிரிப்படைகளுக்கு” இடையில் சிக்கும் நிலை உண்டாகும் என்று கூறியுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (புதன்கிழமை) அறிவித்தார்.
இருப்பினும், முக்கிய கூட்டாளிகளும் சில அமெரிக்க அரசியல்வாதிகளும் டிரம்பின் அறிவிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.
- சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்” – பின்னணி என்ன?
- அமெரிக்காவில் சாவின் விளிம்பில் மகன்: சென்று பார்க்க யேமன் தாய்க்கு அனுமதி மறுப்பு
கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல்முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவின்பேரில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்தீஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.
தற்போது வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்கின்றனர்.
அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற்றால், அது ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் நடவடிக்கையில் ‘எதிர்மறையான தாக்கத்தை’ ஏற்படுத்துவதுடன், ஐஎஸ் அமைப்பு ‘மீண்டும் உயிர்த்தெழ’ வழிவகுக்கும் என்று குர்துகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்புக் கூட்டணி தமது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரான “அபாயகரமான தாக்கத்தை” ஏற்படுத்துவதுடன், “அரசியல் மற்றும் இராணுவ வெற்றிடத்தை” உருவாக்கும் என்றும், மேலும் ஐஎஸ் படைகளின் பிடியில் தங்களது படையினர் சிக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாங்கள் தீவிரவாதக் குழுவாகக் கருதும் குர்து படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடுக்கவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.
துருக்கி அத்தகைய தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.
அமெரிக்காவின் திட்டம் என்ன?
ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கான முயற்சியில் “அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதாக” பென்டகன் கூறினாலும், அதுகுறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
சிரியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளைப் பெற்றுள்ள அமெரிக்கப் படையினரை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்று டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் எத்தனை நாட்களில் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்நடவடிக்கையை அடுத்த 30 நாட்களுக்குள் முடிப்பதற்கு டிரம்ப் விரும்புகிறார் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?
அமெரிக்க செனட் உறுப்பினரும், டிரம்பின் ஆதரவாளருமான லிண்ட்ஸே கிரஹாம், அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது, “ஒபாமா எடுத்தது போன்ற மிகப் பெரிய தவறான முடிவு” என்றும், இது சிரியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் “நாசகரமான விளைவுகளை” ஏற்படுத்துமென்றும் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் ரஷ்யா மற்றும் இரான் செல்வாக்கு செலுத்துவதற்கு இது வழிவகுக்கும் என்று தான் அஞ்சுவதாக அவர் மேலும் கூறினார்.
அமெரிக்கா என்ன சொல்கிறது?
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு முன்பு இது பற்றிக் கூறும்போது, “ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் அவ்வளவு விவரமில்லாதவர்கள் இல்லை. எனவே நாங்கள் களத்தில் நீடித்து நிற்கவும், அதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்” தெரிவித்திருந்தார்.
பிற நாடுகள் என்ன சொல்கின்றன?
பிரிட்டன்: “இன்னும் செய்வதற்கு நிறைய உள்ளது. ஐஎஸ் தரப்பினர் உருவாக்கும் அச்சுறுத்தலை உற்றுநோக்குவதை நாம் தளர்த்திட விடக்கூடாது” என்று பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ்: இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரான்சின் பாதுகாப்புத்துறை அமைச்சர், பிளோரென்ஸ் பார்லே, ஐஎஸ் அமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
- சிரியா: ‘சித்திரவதை செய்து கொல்லப்பட்ட’ நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு
- “சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன தாக்குதலே முக்கிய காரணம்”
“இந்த பயங்கரவாத அமைப்பு முழுவதுமாக, இராணுவ ரீதியாக உறுதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இஸ்ரேல்: அமெரிக்கா “இப்பகுதியில் செல்வாக்கு செலுத்த வேறு வழிகளில்” முயற்சிக்க உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம், முறை குறித்து கண்காணிப்பதோடு, அது தங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயவுள்ளதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா:தமது வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அமெரிக்காவின் முடிவை வரவேற்றார். ஆனால், அமெரிக்கா வெளியேறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் கூறினார். “அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக உள்ளது. தாங்கள் வெளியேறப்போவதாக அவர்கள் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள்” என்றும் புதின் கூறினார். -BBC_Tamil