ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை – டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

ஆனால், டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் தெரிவித்துள்ளது.

‘‘சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கூட்டுப்படை தொடங்கியதில் இருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை கூட்டுப்படை கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் கிழக்கு சிரியாவில் ஐஎஸ் ஆக்கிரமிப்பில் உள்ள கடைசி பகுதியையும் கைப்பற்றி முன்னேறினோம். ஆனால் இன்னும் நாம் முன்னேற வேண்டி உள்ளது. அவர்களிடம் (ஐஎஸ்) பெரிய பிராந்தியம் இல்லாதபோதும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும்.

சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

டிரம்ப் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான டாம் துகண்ட்ஹாட் எம்பி தெரிவித்தார். அமெரிக்க படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது சிரியா மட்டுமின்றி ஈராக் அரசுக்கான ஆதரவையும் தொடருவதுதான் என்றும் டாம் கூறியுள்ளார்.

-athirvu.in