ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமின்றி, டிரம்பின் பாதுகாப்பு செயலாளரான ஜிம் மாட்டிஸ் இன்று (வியாழக்கிழமை) தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்படுவது குறித்து இன்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெறுவது ‘நாசகர’ தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தாலிபான்கள் கொள்கைரீதியாக வெற்றிபெற்றுவதற்கு வித்திடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடும்போக்கு இஸ்லாமிய இயக்கமான தாலிபான், ஆப்கானிஸ்தானின் அரசாகங்கத்தையும், அதன் ராணுவ இலக்குகளையும் குறிவைத்து அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துகிறது.

தாலிபான்கள் 1996-2001 வரையிலான காலக்கட்டத்தில் ஷரியா சட்டத்தின் கொடூரமான வடிவத்தை அமல்படுத்தி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். அப்போது, பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவது, உறுப்புகளை துண்டித்து ஊனமாக்குவது போன்ற செயல்பாடுகளை சர்வசாதாரணமாக மேற்கொண்டனர். பொது வாழ்க்கையில் பெண்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டனர்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் என்ன செய்கிறது?

அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்திய, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டை கோபுரத்தில் விமானத்தை மோத வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2,300க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னரே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்ட அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபான்களிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத தாலிபான்களின் ஆட்சியை ஒழித்து கட்டுவதுடன், ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தனது நாட்டு ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் போர் நடவடிக்கைகள் 2014ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

ஆனால், அந்த அறிவிப்பை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பலம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்ததால், அந்நாட்டில் அமைதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கேயே தொடர்ந்து இருந்து வருகின்றன.

வீண் செலவுகளை ஏற்படுத்துவதால், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பினைக் கருதி காலவரையறையின்றி அமெரிக்க ராணுவம் அந்நாட்டில் இருக்கும் என்றும், அத்துடன் கூடுதலாக 3,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அங்கு அனுப்புவதாகவும் கடந்த ஆண்டு டிரம்ப் அறிவித்திருந்தார். -BBC_Tamil