சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க படைகளும் உதவி புரிந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை அருகே இன்று இரண்டு முறை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணி நிமித்தமாக சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 6 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் சிதறிய கட்டிடத்தின் பாகங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-athirvu.in