இந்தோனேஷியாவில் உயிரிழந்தோர் எண். 281ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமாத்ரா தீவுகளைத் தாக்கிய சுனாமியின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஆகக்குறைந்தது 281ஆக உயர்வடைந்துள்ளது என, இந்தோனேஷிய அதிகாரிகள், நேற்று (24) அறிவித்தனர். அத்தோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

இவ்வனர்த்தம் காரணமாக, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு, இன்னும் பலரைக் காணவில்லை என்ற நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஜாவா தீவுக்கும் சுமாத்ரா தீவுக்கும் இடைப்பட்ட சுண்டா நீரிணையிலேயே, இத்தாக்கம் ஏற்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு நேரத்தில் இதன் தாக்கம் ஏற்பட்ட நிலையில், அப்பகுதிகளில் உயர் அலைகள் ஏற்படக்கூடிய ஆபத்து, இன்று (25) வரை காணப்படுகிறது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அப்பகுதிகளிலுள்ள குடும்பங்கள், தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளன.

இதேவேளை, இந்தச் சுனாமி ஏற்பட்டமைக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என்றாலும், சுண்டா நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள அனக் க்ராகட்டோ எரிமலை வெடித்துச் சிதறியமையின் காரணமாகவே இது ஏற்பட்டது என, பொதுவாக நம்பப்படுகிறது. சுனாமி தாக்குவதற்கு 24 நிமிடங்களுக்கு முன்னர், அந்த எரிமலை வெடித்திருந்தது.

இந்தக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் முகமாக, அந்த எரிமலை அமைந்துள்ள அனக் க்ராகட்டோ தீவின் தெற்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க பகுதி, சுனாமி ஏற்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், கடலுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்று கருதுவதாக, விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் தினத்துக்குள் சில நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த அனர்த்தம், 2004ஆம் ஆண்டில், கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் (26) ஏற்பட்ட சுனாமியை ஞாபகப்படுத்துவதாக அமைந்தது. 14 நாடுகளைத் தாக்கிய இச்சுனாமி காரணமாக, 226,000 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் 120,000 பேர், இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்களாவர்.

-tamilmirror.lk