சிரியாவில் எஞ்சியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளை, தான் அழித்தொழிக்கவுள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான், தனக்கு உறுதியளித்துள்ளாரென, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிரியாவில் ஆதிக்கம் மிக்க நாடாக, துருக்கி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.அமெரிக்கப் படைகளை, சிரியாவிலிருந்து வெளியேற்றுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைகள் தொடர்கின்றன. குறிப்பாக, சிரியாவில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்கியின் கோரிக்கையால் தான், இம்முடிவை அவர் எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதிலும், துருக்கி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே, இம்முடிவை அவர் எடுத்திருந்தமை, சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அம்முடிவை எடுத்த பின்னர், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் ஜனாதிபதி ஏர்டோவானுக்கும் இடையில், மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இது தொடர்பாக நேற்று (24) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “சிரியாவில் எஞ்சியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ, தான் ஒழிக்கப் போவதாக, துருக்கியின் ஜனாதிபதி ஏர்டோவான், என்னிடம் உறுதியாகத் தெரிவித்தார். அதைச் செய்யக்கூடிய மனிதராக அவர் உள்ளார். மேலதிகமாக, துருக்கி, [சிரியாவுக்கு] அடுத்ததாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இதன்மூலமாக, சிரியாவிலிருந்து படைகளை மீளப்பெறுவதற்கான அறிவிப்பை விடுத்தபோது, “சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டுவிட்டது” என, தான் சொன்ன கருத்துடனேயே, ஜனாதிபதி ட்ரம்ப், முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேபோல், சிரியாவில் ஐ.அமெரிக்காவுடன் இணைந்து போரிட்ட குர்திஷ் போராளிகளை அழித்தொழிக்கவே துருக்கி விரும்புகின்ற நிலையில், துருக்கி ஜனாதிபதியை நம்புவது சரியானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இவையனைத்துக்கும் மேலாக, துருக்கி ஜனாதிபதி ஏர்டோவான், சர்வாதிகாரி என, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவற்றாலும் அழைக்கப்படுகிறார். எனவே, அப்படிப்பட்ட ஒருவருடன், ஜனாதிபதி ட்ரம்ப் நெருக்கமாகச் செயற்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-tamilmirror.lk