ரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணை சோதனை வெற்றி – புதின்

தங்கள் நாட்டின் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

தற்போது நடப்பில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டுபிடித்து அழிப்பதற்கு இயலாத அளவுக்கு இது நவீனமானது என்று ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே இந்த புதுவித தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா என்கிறார் அதிபர் புதின்.

பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டுக்கும் இது மிக முக்கிய நிகழ்வு என்று அவர் கூறியுள்ளார்.

இந்த புதுமையான அமைப்பு அணு ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது என்றும், இது அடுத்த ஆண்டு ராணுவ சேவையில் இணையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது பேச்சின்போது இந்தப் புதிய ஆயுதம் ஒரு நெருப்பு பந்து போல தாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏவுகணை

நாட்டு நிலைமை குறித்து மார்ச் மாதம் மக்களுக்கு உரையாற்றிய புதின், இந்த புதுமையான ஆயுதம் நெருப்புப் பந்தைப் போலத் தாக்கும் என்று கூறியிருந்தார்.

ஒலி வேகத்தைப் போல 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் படைத்தது.

ராணுவச் சட்டத்தை விலக்கிய யுக்ரைன்

இதனிடையே, ரஷ்யா தன்னுடைய மூன்று கப்பல்களை பிடித்துச் சென்ற நிலையில் முப்பது நாள்களுக்கு முன் 10 இடங்களில் ராணுவச் சட்டங்களை அமல்படுத்திய யுக்ரைன் அதனை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான பிரசாரத்தை துவக்குவதற்காக அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாக யுக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கூறியுள்ளார்.

ஆனால் எல்லையில் ரஷ்யா இன்னமும் தனது படையையும் இராணுவ தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

யுக்ரைனின் எந்தவித ஆத்திரமூட்டும் நடவடிக்கையிலும் மேற்கு நாடுகள் பங்கெடுக்கக்கூடாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கெர்ச் நீரிணையைக் கடந்து வட யுக்ரைன் துறைமுகத்துக்குச் செல்ல அந்நாட்டு கடற்படைக் கப்பல்கள் முயன்றதையே ஆத்திரமூட்டல் என்கிறது ரஷ்யா. -BBC_Tamil