ஈராக்கில் மீண்டும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்- 20 பேரை கடத்திச் சென்றனர்!

ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்டு சில மாதங்களாக பதுங்கி வாழ்ந்து வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் கிர்குக் நகரின் அருகேயுள்ள கிராமங்களுக்குள் புகுந்து 20 பேரை கடத்திச் சென்றனர்.

ஈராக்-சிரியா நாடுகளுக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அனைவரும் வேட்டையாடி கொல்லப்பட்டதாகவும், பலர் உயிருக்கு பயந்து பாலைவனப் பகுதிகளுக்கு தப்பியோடி விட்டதாகவும் ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈராக் ராணுவம் முழுமையான வெற்றியை பெற்றதாகவும் அவர் பிரகடனம் செய்தார். எனினும், கிர்குக் மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க தொடங்கியதாக சமீபத்தில் தெரிய வந்தது.

இந்நிலையில், கிர்குக் மாகாணம், ரஷாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் 14 பேரை கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள மற்றொரு கிராமத்துக்கும் சென்று அங்கிருந்து 6 பேரை கடத்திச் சென்றுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

-athirvu.in