உரிமைக்கான ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள்.

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்வூர்வலம் பகல் 12.19க்குத் தொடங்கியது.

வழக்குரைஞர்கள் ஊர்வலம் செல்லும் வழியில் கருப்பு உடை அணிந்த இளைஞர் கும்பல் ஒன்று காணப்பட்டது. அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று வினவியதற்குப் பதிலளிக்க மறுத்த அவர்கள் தங்களை “ஒய்பிகளின் பாதுகாவலர்கள்”, என்று கூறிக்கொண்டனர்.

வழக்குரைஞர்கள் அடங்கிய அணியினர் அமைதியாக ஒன்றுகூட உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி , “Bebas, bebas! Bebas himpun!” என்று முழக்கமிட்டுச் சென்றனர்.

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பாலத்தில் தங்களை மலாய் என்ஜிஓ-களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்று அழைத்துக்கொண்ட குழுவினர் குழுமியிருந்தனர்.அவர்கள்,“நாங்கள் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை எதிர்க்கிறோம்” என்று கூவிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்  “இந்தியாவுக்குத் திரும்பிப் போ’” என்று சத்தமிட்டார். வழக்குரைஞர் கூட்டத்தில் இருந்த இந்திய மலேசியர்கள் அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தனர்.

வழக்குரைஞர் கூட்டம் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் சாலையைவிட்டு ஒதுங்கி நின்றது. பிற்பகல் மணி ஒன்றுக்கு வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீயும் இதர ஒன்பது பேராளர்களும் நாடாளுமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே,வழக்குரைஞர்கள் கூட்டம் “Bebas, bebas! Bebas himpun!” என்று முழக்கமிட மலாய் என்ஜிஓ தரப்பினர், “Kami tentang seks bebas!”  என்று எதிர்முழக்கமிட்டனர். அவர்களின் பிரதிநிதியான சுல்கிப்ளி ஷாரிப் என்பார், தாங்கள் அரசுசார்பற்ற பல மலாய் அமைப்புகளைச் சேர்ந்தவர் என்றார். சுமார் 100 பேரடங்கிய அவர்களின் கூட்டம் சில மஞ்சள் நிற டி-சட்டை ஒன்றுக்குத் தீ இட்டது. உடனே போலீசார் தலையிட்டு அதைத் தடுத்தனர்.

நாடாளுமன்றத்துக்குள் சென்ற லிம் சீ வீ , வழக்குரைஞர் மன்றத்தின் அமைதிப்பேரணி மாற்று மசோதாவின் வரைவை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வெளியில் வந்து வழக்குரைஞர் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்.

“அமைதியாக ஒன்றுகூட முடியும் என்பதை இன்று நிரூபித்துள்ளோம். இனி, நம் எம்பிகளுக்குக் கடிதம் எழுதி வழக்குரைஞர் மன்றம் முன்வைத்துள்ள மசோதாவை ஆதரிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ள வேண்டும்.  அமைதியாக பேரணி நடத்த அனுமதித்த போலீசாருக்கு நன்றி.

“ஆனால், இத்துடன்  முடிந்துவிடவில்லை. அமைதிப்பேரணி சட்டம் உருவாகிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாடாளுமன்றக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்”, என்றாரவர்.

இதனிடையே நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற இரண்டு குழுக்களும் கலைந்து சென்ற பின்னர் டாங் வாங்கி ஒசிபிடி சுல்கார்னாய்ன் நிருபர்களிடம் பேசினார்.

“எல்லாம் கட்டுக்குள் இருந்தது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அவர்கள் சாலையை மட்டும் மறித்துக் கொண்டனர். ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடிந்தது.”

போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதா என வினவப்பட்ட போது,” மோசமாக பாதிக்கப்பட்டது நான் சொல்வது நியாயமாக இருக்காது. ஆனால் போக்குவரத்து மெதுவாக நடைபெற்றது”, என்றார் சுல்கார்னாய்ன்.

“அவர்கள் எங்களுடைய உத்தரவுகளுக்கு செவி சாய்த்தது நல்ல விஷயம். எல்லாம் சுமூகமாக நடைபெற்றது. ”

பொதுக் கூட்ட மசோதா எதிர்ப்பு ஊர்வலத்தில் 400 பேர் முதல் 500 பேர் வரையிலும் போட்டி ஊர்வலத்தில் 150 முதல் 200 பேர் வரையிலும் பங்கு கொண்டதாக அவர் மதிப்பிட்டார்.