ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உலகப் பொலிஸ்காரராக இருக்க முடியாதென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்கப் படையினரிடத்தே அறிவிக்கப்படாத கிறிஸ்மஸ் விஜயத்தை தானும் ஐக்கிய அமெரிக்க முதற்பெண்மணி மெலானியா ட்ரம்பும் நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த கருத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் அவர்களின் பிராந்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் செலவுகளின் சுமையை பகர வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அனைத்து சுமைகளும் எங்களிடம் ஐக்கிய அமெரிக்கா பொறுப்பது நியாயமல்ல.
எங்களையும் எங்களது அற்புதமான இராணுவத்தையும் பயன்படுத்தி தங்களை நாடுகள் பாதுகாப்பதிலிருந்து எந்த அனுகூலத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.
எஞ்சியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான ஈராக் அரசாங்கத்தின் போரில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக ஏறத்தாழ 5,000 படையினரை இன்னும் ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது.
இந்நிலையில், படைகளின் சேவைக்கும் அவர்களின் வெற்றிக்கும் தியாகத்துக்கும் நன்றி தெரிவிப்பதற்காக கிறிஸ்மஸ் அன்று இரவு ஜனாதிபதி ட்ரம்பும் அவரின் மனைவி மெலானியா ட்ரம்பும் ஈராக்குக்கு பயணமானதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈராக்கியத் தலைநகர் பக்தாத்தின் மேற்காகவுள்ள அல்-அசாட் விமானத்தளத்துக்கே ட்ரம்பும் மெலானியாவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனும் விஜயம் செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த தனது விஜயத்தின்போது சிரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் தனது முடிவை ட்ரம்ப் நியாயப்படுத்தியதுடன், ஈராக்கிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை எனத் தெரிவித்த நிலையில், சிரியாவில் தமக்கெதுவும் செய்ய வேண்டுமென்றால் ஈராக்கை முன்னரங்குத் தளமாக ஐக்கிய அமெரிக்கா பாவிக்குமென ட்ரம்ப் கூறியதாக றொய்ட்டர்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இதுவே ட்ரம்பின் ஈராக்குக்கான முதலாவது விஜயமாக அமைந்திருந்த நிலையில், இது மூன்று மணித்தியாலங்கள் வரையே நீடித்திருந்தது.
ஈராக்கியப் பிரதமர் அடெல் அப்துல் மஹ்டிக்கும் ட்ரம்புக்குமிடையே திட்டமிடப்பட்ட சந்திப்பொன்று எவ்வாறு சந்திப்பை மேற்கொள்வதென்ற வேறுபாடுகள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதாக பிரதமர் அடெல் அப்துல் மஹ்டியின் அலுவலகம் தெரிவித்த நிலையில், இருவரும் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்த வெள்ளை மாளிகை, ஐக்கிய அமெரிக்காவுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடெல் அப்துல் மஹ்டி ஏற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளது.
திரும்பும் வழியில், ஜேர்மனியின் றம்ஸ்டெய்ன் விமானத் தளத்தில் ட்ரம்பின் விமானம் எரிபொருள் மீள்நிரப்பியிருந்த நிலையில், அங்கு விமானமிருந்த சிறிது நேரத்தில் அங்குள்ள படைகளையும் ட்ரம்ப் சந்தித்திருந்தார்.
-tamilmirror.lk