ரஷ்யாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதன வெற்றி! : கலக்கத்தில் அமெரிக்காவும், சீனாவும்

காற்றில் ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பயணித்து எதிரிகள் இலக்கைத் தாக்கும் அணுவாயுதத்தைச் சுமந்து செல்லக் கூடிய அதி நவீன கிளைடர் எனப்படும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது ரஷ்யா.

இந்தத் தொழிநுட்பத்தை இதுவரை பெற்றிராத காரணத்தால் அமெரிக்காவும் சீனாவும் கலக்கம் அடைந்துள்ளன.

கம்சாட்கா தீபகற்பத்தில் உள்ள இலக்கை சுமார் 3500 மைல் தூரம் பயணிக்கக் கூடிய இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் சென்று தாக்கியுள்ளது. இந்த சோதனை சரியான நேரத்தில் மிகவும் உன்னதமான புத்தாண்டுப் பரிசு என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக அமெரிக்கா விமானங்களில் இருந்து ஏவக் கூடிய ஹைப்பர் சோனிக் ஆயுதங்களைத் தயாரித்து வருகின்றது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் திறன்களை ஒருங்கே பெற்ற ரஷ்யாவின் இந்த நவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையானது அதிகபட்சமாக 12 000 Km தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடியது ஆகும்.

இந்த ஏவுகணையானது நவீன ஏவுகணைப் பாதுகாப்புப் பொறிமுறையை உடைக்கும் திறன் கொண்டதால் சீனாவும் கலக்கமடைந்துள்ளது. இதேவேளை ஈரானுக்குத் திடீர் பயணம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மைய ஊடகப் பேட்டி ஒன்றின் போது அமெரிக்காவினால் இனிமேலும் உலகப் போலிசாக இருக்க முடியாது என்றும் மற்ற நாடுகளும் உலகின் முக்கியப் பிரச்சினைகளில் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com