குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிஃபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் “கொத்தடிமையாக” கொண்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிஃபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங்கிலியால் கட்டி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் ஜெனிஃபர் எடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜெர்மனியின் முனிச் நகரத்திலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இதுகுறித்த விசாரணையில் ஜெனிஃபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
- சிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்
- காணாமல் போன துபாய் இளவரசி: உண்மை நிலவரம் என்ன?
ஜெனிஃபரும் அவரது கணவரும், மொசூல் நகரத்தில் போர் கைதிகளுடன் இருந்த அந்த சிறுமியை ஜெர்மனிக்கு அழைத்து வந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு இராக்கின் வடக்குப்பகுதி முழுவதும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த ஐ.எஸ் இயக்கத்தினர், அச்சமயத்தில் அடிமைப்படுத்திய யாசிடி என்னும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக அந்த சிறுமி இருக்கலாம் என்று ஜெர்மானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“அந்த சிறுமி உடல்நிலை மோசமடைந்திருந்த சமயத்தில், மெத்தையில் சிறுநீர் கழித்ததால், ஜெனிஃபரின் கணவர் வீட்டின் வெளியே சிறுமியை சங்கிலியால் கட்டியதுடன், கடும் வெயிலில் தாகத்தில் வேதனை பொறுக்காமல் சிறுமியை இறக்க செய்துள்ளார்” என்று விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“தனது கணவரின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்த ஜெனிஃபர், சிறுமியின் உயிரை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.”
கடந்த 2014ஆம் ஆண்டு இராக்கிற்கு சென்ற ஜெனிஃபர், ஐ.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தரங்க தகவல்களை பாதுகாக்கும் ஜெர்மன் சட்டங்களின்படி அப்பெண்ணின் பெயர் ஜெனிஃபர் டபிள்யூ என்பதைத் தவிர, அவரைப் பற்றிய பிற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
“ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பெண்கள் அந்த இயக்கத்தால் அமல்படுத்தப்பட்டிருந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு ஜெனிஃபருக்கு வழங்கப்பட்டிருந்தது.”
சிறுமி உயிரிழந்த சில மாதங்களுக்கு பிறகு, தன்னுடைய ஆவணங்களை புதுப்பிப்பதற்காக துருக்கியின் தலைநகர் அன்காராவிலுள்ள ஜெர்மானிய தூதரகத்திற்கு வந்த ஜெனிஃபரை துருக்கி காவல்துறை கைதுசெய்தது.
- ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? பிபிசி ஆய்வு
- அமெரிக்கா விதித்த தடை: இரான் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
கைதுசெய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்ட ஜெனிஃபர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குரிய போதிய ஆவணங்கள் இல்லாததால் அவர் தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் சிரியாவுக்கு செல்வதற்கு முயற்சி செய்த ஜெனிஃபரை கைதுசெய்த ஜெர்மானிய காவல்துறையினர் அதுமுதல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வந்தனர்.
ஜெனிஃபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணையின் தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. -BBC_Tamil