கோடரிகளையும், ஆயுதங்களையும் கையில் ஏந்திய கும்பல், ஜுரா காரூஹிம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை வெளியே அனுப்புமாறு கூச்சலிட்டபோது, அவரிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆனால் நிராயுதபாணியான ஜுரா துணிச்சலுடன் அவர்களை எதிர்த்தார்.
அதற்கு காரணம் அவரிடம் மந்திர சக்திகள் இருப்பதாக வன்முறை கும்பல் கருதியதுதான். இல்லையென்றால், அடைக்கலமாக இருப்பவர்களை வெளியே அனுப்பு என்று கேட்டுக்கொண்டு வீட்டிற்கு வெளியே அவர்கள் நின்றிருக்கமாட்டார்கள். வெறியுடன் வீட்டினுள் புகுந்து ஜுரா காரூஹிம்பியை வெட்டித் தள்ளிவிட்டு அனைவரையும் கொன்று குவித்திருப்பார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தனது வீட்டில் மறைத்து வைத்து அவர்களின் உயிரை காப்பாற்றிய 93 வயதான ஜுரா காரூஹிம்பி கடந்த வாரம் ருவாண்டா தலைநகர் கிகாலியில் இறந்தார்.
ருவாண்டா இனப்படுகொலையின் கொடுமையான நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒன்றுதான் இந்த சம்பவம்.
1994ஆம் ஆண்டு தொடங்கிய படுகொலைகளில், ருவாண்டாவின் துத்சி சமூகத்தை சேர்ந்த சுமார் எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஹூதூ சமூகத்தை சேர்ந்த மிதவாதிகளும் இந்த படுகொலையில் உயிரிழந்தனர். இதில் ஜுரா காரூஹிம்பியின் மூத்த மகளும் ஒருவர்.
படுகொலை முடிவடைந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜுரா காரூஹிம்பியின் வீட்டில் அவரை சந்தித்து பிபிசி பேசியது. அப்போது, “அந்த படுகொலை சமயத்தில் மனித மனதின் கொடூரத்தை கண்ணால் கண்டேன்” என்று அவர் வேதனையுடன் சொன்னார்.
ருவாண்டாவின் 1994 நடைபெற்ற படுகொலைகளில் சுமார் எட்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
பாரம்பரிய ஓஜா குடும்பத்தை சேர்ந்தவர்
காரூஹிம்பியைப் பற்றி பல கதைகள் உலா வருகின்றன. அவற்றின்படி, பாரம்பரியமான ஓஜா குடும்பத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர் ஜுரா காரூஹிம்பி.
1994ஆம் ஆண்டு இனப் படுக்கொலைகளின் ஆணிவேர் அவரது குழந்தை பருவத்துடன் தொடர்புடையுள்ளது. பெல்ஜியத்தின் ஆட்சியின் கீழ் ருவாண்டா இருந்த காலகட்டம் அது.
பெல்ஜியத்தின் காலனி ஆட்சி, ருவாண்டா மக்களை இனரீதியான குழுக்களாக பிரித்தாளும் முயற்சியை தொடங்கியது. ஹூதூ மற்றும் துத்சி என பிரத்யேக அடையாள அட்டை கொடுத்து மக்களை இனக்குழுக்களாக அதிகாரபூர்வமாக பிளவுபடுத்தியது அரசு.
- காந்தி சிலை அமைக்க ஆப்பிரிக்க நாடான மலாவி தடை விதித்தது ஏன்?
- வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாத ஆப்பிரிக்க நாட்டு மக்கள்
ருவாண்டாவில் பெரும்பான்மை சமூகமாக இருந்த ஹூதூ இனக்குழுவை சேர்ந்தவர் காரூஹிம்பி. ஆனால் துத்சி இனக்குழு உயர்ந்த இனமாக கருதப்பட்டது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் மற்றும் தொழிலில் பாகுபாடு காட்டியது அரசு.
இப்படி பிரிவினையை நோக்கமாக கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் தொடர்ச்சியாக 1959இல் துத்சி இனக்குழுவின் தலைவன் ‘கிரிகோரி பஞ்சம்’ மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அண்டை நாடான உகாண்டாவில் தஞ்சம் புக நேர்ந்தது. இது, ருவாண்டாவில் ஏற்பட்ட ஹூதூ புரட்சிக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு.
1994இல், ஹூதூ இனத்தைச் சேர்ந்த அதிபர் ஜுவேனால் ஹெப்யாரிமானா படுகொலை செய்யப்பட்ட பிறகு, துத்சி இனத்திற்கு எதிரான வன்முறைகள் தொடங்கின. அப்போது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதல்களையும், வன்முறைகளையும் அதற்கு முன்பு காரூஹிம்பி பார்த்ததில்லை.
உங்களது கல்லறையை நீங்களே தோண்ட வேண்டாம்
வன்முறை வெறியாட்டம் தொடங்கிய பிறகு, முசாமா கிராமத்தில் இருந்த காரூஹிம்பியின் வீட்டில் துத்சி இனத்தை சேர்ந்தவர்கள் தஞ்சம் புகுந்தனர். அவர்களைத் தவிர புருண்டியை சேர்ந்தவர்களும், மூன்று ஐரோப்பியர்களும் அடைக்கலம் புகுந்திருந்தனர்.
காரூஹிம்பியின் படுக்கைக்கு கீழ் சிலர் மறைந்திருந்த்தாக்வும், சிலர் வீட்டில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் பரணில் ஒளிந்துகொண்டதாகவும் காரூஹிம்பியுடனான பேட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார்.
தனது நிலத்தில் குழி தோண்டி அதில் சிலரை தங்க வைத்திருந்தார் காரூஹிம்பி.
கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்களின் கருவில் இருந்த சிசுக்களை வெளியில் எடுத்து அந்த சிசுக்களையும் காப்பாற்றியதாக, காரூஹிம்பி தனது பேட்டியின்போது கூறியது, நிலைமையின் தீவிரத்தை புரியவைக்கிறது.
படுகொலைகளின் இருபதாவது ஆண்டு நினைவு நாளின்போது பத்திரிகையாளர் ஜீன் பியேரே புக்யேங்சென்கே, காரூஹிம்பியிடம் பேசினார். காரூஹிம்பியால் காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாவிட்டாலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிர் பிழைக்க அவர் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் புக்யேங்சென்கே.
“ஜூரா காரூஹிம்பியிடம் இருந்தது ஒரேயொரு ஆயுதம் மட்டுமே, தாக்குதல் நடத்தினால், அவர்கள் மீது மந்திர சக்தியை ஏவிவிடப்போவதாக எச்சரித்தார் அவர். தாக்குதல்காரர்கள் தாக்கினால், அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தனது மந்திர சக்தி சும்மாவிடாது என்று பயமுறுத்தினார் காரூஹிம்பி,” என்கிறார் ஜீன் பியேரே புக்யேங்சென்கே.
“உடலில் எரிச்சல் ஏற்படுத்தும் மூலிகைச் செடியை தனது கைகளிலும், உடலில் பூசிக்கொண்ட காரூஹிம்பி, தாக்குதல்தாரிகளை சென்று தொட்டார். இப்படிச் செய்தால், அது மந்திரத்தின் மாயம் என்று நினைத்து வெறிகொண்ட கும்பல் பயந்து பின்வாங்கும் என்று அவர் நினைத்தார்” என்று காரூஹிம்பியின் சாதுர்யமான யோசனையைப் பற்றி விளக்குகிறார் புக்யேங்சென்கே.
காரூஹிம்பியால் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவரான ஹஸன் ஹாபீயாகாரேவும் காரூஹிம்பியின் இந்த யுக்தியை நினைவில் வைத்திருக்கிறார்.
“சீற்றமடைந்திருந்த ஹூதூ இனத்தை சேர்ந்தவர்களை எச்சரித்த காரூஹிம்பி, தனது புனிதமான இடத்திற்குள் அவர்கள் காலடி எடுத்துவைத்தால், கடவுள் உக்ரமடைந்து தண்டிப்பார் என்றும் பயமுறுத்தினார். இது தாக்குதல்தாரிகளை அச்சமடையச் செய்தது. இப்படி பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு, அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார்,” என்று நினைவுகூர்கிறார் ஹஸன் ஹாபீயாகாரே.
2014ஆம் ஆண்டு ‘த ஈஸ்ட் ஆஃப்ரிகன்’ பத்திரிகையிடம் பேசிய காரூஹிம்பி, “அன்று சனிக்கிழமை, அவர்கள் என் வீட்டிற்கு கூட்டமாக வந்தபோது, அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். என் வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருப்பவர்களை கொன்றால், அது தங்கள் சாவுக்கு அழைப்பு விடுப்பதாகவே இருக்கும் என்று பயமுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.
அவரது எச்சரிக்கையும், பயமுறுத்தலும் அந்த நேரத்தில் வேலை செய்தது. பிறரது உயிரை பறிப்பதற்கு அஞ்சாதவர்களுக்கும், தனது உயிர் மீது ஆசை இருக்கத்தானே செய்கிறது?
1994ஆம் ஆண்டு ஜுலை மாதம், துத்சி தலைமையில் எதிரிகள் தலைநகர் கிக்லியை கைப்பற்றியபோது, காரூஹிம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தனர் என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருந்தது.
படுகொலையின்போது, நியாமாடா தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
பாதுகாக்கப்பட்ட அவர்களது ஆடைகள்
இந்த வன்முறையில் காரூஹிம்பியின் மகன் கொல்லப்ட்டார். தன்னுடைய மகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டதாக காரூஹிம்பி தெரிவித்தார். நூற்றுக்கணக்கானவர்களின் உயிரை வன்முறையில் இருந்து காப்பாற்றிய காரூஹிம்பியின் குழந்தைகள் அதே வன்முறையில் கொல்லப்பட்டார்கள் என்பது மனதிற்கு வருத்தமளிக்கிறது.
காரூஹிம்பி சூனியக்காரி என்று முஸாமோ கிராமத்தில் பலரும் நம்புகின்றனர். ஆனால், தான் மந்திரம் செய்யும் சூனியக்காரி இல்லை என்று காரூஹிம்பி மறுத்தார்.
2014ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் காரூஹிம்பி இவ்வாறு தெரிவித்தார்: ‘கடவுளிடம் மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மந்திர-தந்திர சக்திகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அடைக்கலம் புகுந்தவர்களின் உயிரைக் காப்பாற்றவே நான் மந்திரத்தை ஏவிவிடுவேன் என்று எச்சரித்தேன்’.
காரூஹிம்பியின் பாரட்டத்தக்க சேவைக்காக ருவாண்டா அரசு அவருக்கு பல சிறப்பு விருதுகள் அளித்து மரியாதை செய்திருக்கிறது. இனப்படுகொலைக்கு எதிரான பிரசாரத்திற்கான விருது 2006ஆம் ஆண்டு காரூஹிம்பிக்கு வழங்கப்பட்டது.
இதுமட்டுமல்ல, காரூஹிம்பியின் வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு முக்கியமான நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
1959இல் இரு சமூகங்களுக்கு இடையில் நடைபெற்ற கடுமையான மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, துத்சி சமூகத்தை இரண்டு வயது ஆண் குழந்தையை பாதுகாக்க குழந்தையின் தாய்க்கு காரூஹிம்பி சொன்ன உபாயம் என்ன தெரியுமா? ‘உனது கழுத்தணியில் இருந்து இரண்டு முத்துக்களை எடுத்து, குழந்தையின் முடியில் கோர்த்துவிடு’.
- நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்
- பருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை?
ஆச்சரியமாக இருக்கிறதா? வன்முறையாளர்கள் பெண்குழந்தைகளை பொதுவாக கொலை செய்வதில்லை என்பது காரூஹிம்பிக்கு தெரியும். அதோடு, பெண் குழந்தைகளுக்கு தலைமுடியில் முத்து கோர்த்து அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்தது. இரண்டையும் இணைத்து யோசனை செய்த அவர், ஆண் குழந்தையை பெண் குழந்தையாக காட்டும்படி தலைமுடியில் முத்து கோர்க்கும் நுட்பமான யோசனையைச் சொல்லி ஒரு குழந்தையை காப்பாற்றியிருக்கிறார்.
இதில் மற்றுமொரு சுவராசியமான விஷயம் என்னவென்றால், தனக்கு பதக்கம் கொடுத்து சிறப்பித்த ருவாண்டா அதிபர் பால் ககாமே தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தலைமுடியில் முத்து கோர்க்கப்பட்டு உயிர் பிழைத்த இரண்டு வயது ஆண் குழந்தை என்று காரூஹிம்பி தெரிவித்தார்.
தன்னால் காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்பதுபோன்ற எந்தவித தகவல்களும் தனக்குத் தெரியாது என்று காரூஹிம்பி தெரிவித்தார். அவரது வாழ்வின் அந்திமக் காலத்தில் அவரது உறவுக்கார பெண் ஒருவரின் பராமரிப்பில் இருந்தார் காரூஹிம்பி.
இறுதியாக காரூஹிம்பியிடம் நேர்காணல் கண்டபோதும் அவர் தனது அந்த சரித்திர புகழ் பெற்ற வீட்டிலேயே வசித்துவந்தார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் வீடு சரியாக பராமரிக்கப்படாமல் அலங்கோலமாக இருந்த்து.
பால் ககாமேயிடம் இருந்து கிடைத்த பதக்கத்தை தனது சொத்தாக பாதுகாத்து வந்தார் காரூஹிம்பி. எப்போதும் அந்த பதக்கத்தை கழுத்தில் அணிந்திருப்பார். உறங்கும்போதும், தனது தலையணையின் கீழே வைத்திருப்பார் காரூஹிம்பி.
அந்த கொடுமையான நாட்களில் ஹூதூ பெண்களும், துத்சிக்களை காப்பாற்ற முயற்சி செய்தார்கள் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி, காரூஹிம்பியை சந்தித்து அவரிடம் உரையாடியவர்களிடம் இருந்து வெளியுலகிற்கு தெரியவந்த்து.
பத்திரிகையாளர் புக்யேன்சேன்கே இவ்வாறு கூறுகிறார்: “பிறரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை பணயம் வைத்து, ஆயுதங்கள் ஏந்திய கொலைவெறி கும்பலை சாமர்த்தியமாக செயல்பட்டு சமாளித்தார் காரூஹிம்பி. அவரது புத்திசாலித்தனம் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றியது.”
“மிகவும் இக்கட்டான சமயத்திலும், மனிதநேயம் உயிர் பிழைத்திருக்கிறது என்பதை காரூஹிம்பியின் வாழ்க்கை நமக்கு சொல்கிறது.” -BBC_Tamil