தாகா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா, 71, தலைமையில் இயங்கும், அவாமி லீக் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, ஷேக் ஹசீனா, பிரதமராக பதவியேற்க உள்ளார்.
வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் உள்ளது. இக்கட்சித் தலைவர், ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக் காலம் முடிவதை அடுத்து, சமீபத்தில், பொதுத் தேர்தல் நடந்தது.பார்லிமென்டில் மொத்தமுள்ள, 300 தொகுதிகளில், 299ல் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், தேர்தல் நடக்கவில்லை.
15 பேர் பலி
தேர்தலின் போது, பல இடங்களில் வன்முறை தாண்டவமாடியது. இதில், 15 பேர் பலியாகினர். தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவாமி லீக் கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.தேர்தலை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், அவாமி லீக் கூட்டணி, 288 தொகுதிகளை கைப்பற்றி, அபார வெற்றி பெற்றது.பதிவான மொத்த ஓட்டுகளில், 82 சதவீதம், அவாமி லீக் கூட்டணிக்கு கிடைத்ததாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.அவாமி லீக் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட, என்.யு.எப்., எனப்படும், தேசிய ஐக்கிய முன்னணி, 15 சதவீத ஓட்டுகளுடன், ஏழு தொகுதிகளை மட்டும்
கைப்பற்றியது.இதற்கு முன், அதிகபட்சமாக, 2008ல் நடந்த பொதுத் தேர்தலில், அவாமி லீக் கூட்டணிக்கு, 262 தொகுதிகள் கிடைத்தன. அந்த சாதனையை, தற்போதைய தேர்தலில், அக்கூட்டணி முறியடித்துள்ளது.இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, வங்கதேசபிரதமராக, ஷேக் ஹசீனா பதவியேற்க உள்ளார்.ஷேக் ஹசீனாவுக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் வாழ்த்து கூறினார். அப்போது, ”வங்கதேச அரசுக்கு, இந்திய அரசின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்,” என, மோடி தெரிவித்தார்.
கேள்விக்குறி
வங்கதேசத்தில் ஆளும் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட, என்.யு.எப்., கூட்டணியில், முக்கிய கட்சியான, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசிய கட்சியின் தலைவர், கலீதா ஜியா, 73.பிரதமர் ஷேக் ஹசீனாவின் பரம எதிரியாக கருதப்படும் இவர், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, சிறையில் உள்ளார்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.இதற்கிடையே, ‘தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது’ என கூறியுள்ள, என்.யு.எப்., தேர்தலை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் கமிஷனை வலியுறுத்தி உள்ளது.ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன்நிராகரித்துள்ளது.
கிரிக்கெட் கேப்டன் மொர்டாஸா சாதனை
வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், நரெயில் – 2 லோக்சபா தொகுதியில், ஆளும் அவாமி லீக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, அந்நாட்டு கிரிக்கெட் அணி கேப்டன், மஷ்ரபே மொர்டாஸா, பதிவான ஓட்டுகளில், 96 சதவீதத்தை பெற்று, புதிய சாதனை படைத்துள்ளார்.இத்தேர்தலில், மொர்டாஸாவுக்கு, 2.74 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட, என்.யு.எப்., கூட்டணி வேட்பாளர் பரிதுஸாமன், 8,006 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.வங்கதேசத்தில், இதற்கு முன், அந்த நாட்டு கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற, நைமுர் ரஹ்மான் துர்ஜோய், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் நிலையில், எம்.பி., ஆன முதல் வீரராக, மொர்டாஸா திகழ்கிறார்.
ஆதரவாளர்கள் புகழாரம்
வங்கதேசம் உருவாவதில் முக்கிய பங்கு வகித்தவரான, ஷேக் முஜிபுர்ரஹ்மானின் மகள், பிரதமர் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது. அவர், ‘வங்கதேசத்தின் இரும்பு பெண்மணி’ என, அழைக்கப்படுகிறார்.’வங்கதேசம், பிரமிப்பான வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு, பிரதமர் ஷேக் ஹசீனாவே காரணம்’ என, அவரது ஆதரவாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆனால், ஷேக் ஹசீனா, தன் சர்வாதிகார போக்கால், எதிர்க்கட்சி தலைவர்களை வதைத்து வருவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
-dinamalar.com