அணு ஆயுத ஒழிப்பு குறித்து தாம் உறுதியாக இருப்பதாக கூறும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், ஆனால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தால் தானும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட தனது புத்தாண்டு உரையில் கிம் ஜாங்-உன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வட கொரிய அதிபர் ஆற்றிய புத்தாண்டு உரை, தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் சர்வதேச அரசியல் உறவுகளில் முன்னோடி பாதையை அமைத்துக் கொடுத்தது.
2018 ஜூன் மாதம் அணு ஆயுத களைவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
முன்னதாக, கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்க நிலப்பரப்பை தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து பார்த்து அப்பிராந்தியத்தில் வட கொரியா பதற்றங்களை அதிகரித்தது.
புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பழக்கத்தை, தனது தாத்தாவும், முன்னாள் அதிபர் கிம்மிடம் இருந்து பெற்றார் இன்றைய அதிபர் கிம் ஜாங்-உன்.
தொடக்கக் காலத்தில் வடகொரிய மக்களுக்காக பிரத்யேகமாக இருந்த புத்தாண்டு உரை, கடந்த ஆண்டு போலவே நாட்டின் பொருளாதாரத்தை மையமாக கொண்டிருக்கிறது.
இன்று காலை வடகொரிய அரசு ஊடகத்தில் உரையாற்றிய கின் ஜாங்-உன், “அமெரிக்கா, உலகத்தின் முன் அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல், வடகொரியா மீது தடைகளையும் அழுத்தங்களையும் அதிகரித்தால், நாட்டின் இறையாண்மையை காப்பாற்ற புதிய வழியை தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை” என்று உறுதிபடக் கூறினார்.
2019ஆம் ஆண்டில் அமெரிக்கா எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வட கொரியா காத்துக் கொண்டிருக்கிறது, அதைப் பொருத்தே அணு ஆயுத பரிசோதனைகளை தொடர்வதா வேண்டாமா என்பதை வட கொரியா முடிவு செய்யும் என்று சொல்கிறார் சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர்.
அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தடைகளை வட கொரியா எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு
- வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு
புதிய அணு ஆயுதங்களை தயாரிப்பது, அணு ஆயுதப் பரவல் மற்றும் அணு ஆயுத பயன்பாட்டை தொடரப் போவதில்லை என்று வட கொரியா ஏற்கனவே உறுதி கொடுத்திருப்பத்தாகவும், அதை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக வட கொரிய அதிபர் கூறுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் சந்திக்க எப்போதும் தயார் என்றும் கிங் ஜாங்-உன் கூறியிருக்கிறார்.
“இதைத் தான் பலரும் எதிர்பார்த்தார்கள்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் என்.கே நியூஸின் ஓலிவெர் ஹோதம்.
“ஒட்டு மொத்தமாக கிம் ஜாங்-உன்னின் இந்த புத்தாண்டு உரையானது வட கொரியாவின் முக்கியமான விவகாரங்களில் அவரது நிலைப்பாட்டை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்புடன் தென் கொரியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில். அமெரிக்காவுக்கும் உறுதியான செய்தி அனுப்பியிருக்கிறது” என்கிறார் ஓலிவெர் ஹோதம்.
கிம் ஜாங்-உன்னின் கடந்த ஆண்டு புத்தாண்டு உரையில் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா கலந்துக் கொள்ளும் என்று அறிவித்தார்.
அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த அறிவிப்பு, பிறகு தென் கொரியாவுடனான உறவையும், பிறகு சர்வதேச அளவில் வட கொரியாவின் அணுகுமுறையையும் மாற்றியது.
முன்னதாக, வட கொரியா அடுத்தடுத்து நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகள், ஜப்பான் தலைக்குமேல் அது பறக்கவிட்ட சோதனை ஏவுகணைகள், ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அமெரிக்காவும், ஐ.நா.வும் விதித்த தடைகள் ஆகியவை 2018 பிறந்தபோது சர்வதேச அரசியலை சூடாக்கிவந்தன.
டிரம்பைப் பார்த்து வயதான பைத்தியம் என்றார் வடகொரியத் தலைவர் கிம். இதற்குப் பதிலடியாக குட்டி ராக்கெட் மனிதன் என்று அவரை கிண்டல் செய்தார் டிரம்ப். அத்துடன், உலகம் இதுவரை பார்த்திராதவகையில் தீயும் சினமும் கொண்டு வடகொரியாவைத் தாக்குவோம் என்றும் டிரம்ப் முழங்கினார்.
அணு ஆயுத வல்லமை மிக்க இந்த இரு நாட்டுத் தலைவர்கள் பயன்படுத்திய இந்த மொழி எல்லோரையும் பதறவைத்தது.
இந்நிலையில், உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த வடகொரியாவுக்கு, தனது பங்காளி நாடான தென்கொரியாவுடன் உறவை சீரமைக்கும் வாய்ப்பை கிம் ஜாங்-உன்னின் கடந்த ஆண்டு புத்தாண்டு உரை ஏற்படுத்திக் கொடுத்த்து.
பங்காளிகளாகப் பிரிந்த நாடுகள், அண்ணன் – தம்பியாகி இணைந்தது, அவர்களின் இரு தரப்பு உறவுகள் மேம்படுவதற்கு மட்டுமல்ல, அமெரிக்கா-வட கொரியா உறவின் பதற்றம் தணியவும் காரணமாக அமைந்தது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங்- உன் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதை முதலில் டிரம்பிடம் தெரிவித்து அதற்கு இசைவு பெற்றது தென்கொரியாதான். இதனை முதலில் வெளியில் அறிவித்ததும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்தான்.
அதன் பிறகு வடகொரிய-தென் கொரிய உறவில் நிகழ்ந்ததைப் போலவே நம்ப முடியாத அதிசயங்கள் அமெரிக்க வடகொரிய உறவில் நிகழ்ந்தன.
சில ஆரம்பகட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி நடந்தேவிட்டது. வடகொரிய அதிபர் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுத ஒழிப்பை மேற்கொள்ள வட கொரியா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், குறிப்பான உறுதி மொழிகள் எதையும் அது வழங்கவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் குறித்தும், வடகொரியாவின் நோக்கங்கள் குறித்தம் ஐயங்கள் நிலவின.
இதைப் போக்கும் வகையில், தமது அணு ஆயுத சோதனை தளம் ஒன்றை இடித்து நம்பிக்கையைப் பெற வட கொரியாவும் முயன்றது. இதைப் போல நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை, குறிப்பாக, தடை நீக்கம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவும் முன்னெடுக்கவேண்டும் என்று வட கொரியா விரும்பியது.
தற்போது கிம் ஜாங்-உன்னின் இந்த புத்தாண்டு உரை ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.
இரு கொரிய நாடுகளும் நடத்தவிருக்கும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தென்கொரிய தலைநகர் சியோலுக்கு பயணம் செய்யும் திட்டம் கிம் ஜாங்-உன்னுக்கு இருப்பதாக கூறப்பட்டாலும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
-BBC_Tamil