புத்தாண்டுத் தினத்தில் மிக அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா!

2019 ஆமாண்டு புதுவருடத் தினமான ஜனவரி முதலாம் திகதி உலகில் மிக அதிக குழந்தைகள் பிறந்த நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா இன் சர்வதேச சிறுவர் நல அமைப்பான யுனிசெஃப் கருத்துத் தெரிவித்துள்ளது.

2019 ஆமாண்டு புத்தாண்டுத் தினத்தன்று உலக அளவில் 395 000 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் இதில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் பிறந்திருப்பதாகவும் யுனிசெஃப் இன் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

மிக அதிகபட்சமாக இந்தியாவில் 69 944 குழந்தைகளும், சீனாவில் 44 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 685 குழந்தைகளும் பிறந்துள்ளன. பாகிஸ்தானில் 15 112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 256 குழந்தைகளும், அமெரிக்காவில் 11 086 குழந்தைகளும், காங்கோவில் 10 053 குழந்தைகளும் வங்கதேசத்தில் 8428 குழந்தைகளும் பிறந்துள்ளன.

புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணிக்குச் சரியாக அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாத்திரம் 168 குழந்தைகளும், டோக்கியோவில் 310 குழந்தைகளும், பீஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயோர்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளன. எல்லா நாடுகளுடனும் ஒப்பிடுகையில் முதலில் புத்தாண்டை எதிர் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மிகச் சரியாக உலகின் முதற் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி என்ற நகரில் பிறந்ததாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

புத்தாண்டுத் தினத்தன்று கடந்த ஆண்டும் மிக அதிகமான குழந்தைகள் இந்தியாவில் தான் பிறந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com