அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் வாக்களித்துள்ளனர். எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, தனது அமெரிக்க – மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ரத்து செய்வேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரான நான்சி பெலோசி, எல்லைச்சுவர் திட்டத்திற்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
- முத்தத்திலும், வான வேடிக்கையிலும் நனைந்த உலக மக்கள் (படங்கள்)
- அமெரிக்கா: வாழ்வுதேடி வந்த இடத்தில் செத்து மடிந்த குழந்தைகள்
செனட் சபையில் ஆதிக்கம் செலுத்தும் குடியரசு கட்சியினர் இதுகுறித்த ஓட்டெடுப்பில் கூட பங்கேற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின் மூலம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கும், வரும் செப்டம்பர் மாதம் வரை மற்ற பல அரசுத்துறைகளுக்கும் தேவையான நிதித்தேவை பூர்த்தி செய்யப்படும்.
முரண்டு பிடிக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.
“கவர்ன்மென்ட் ஷட் டவுன்” என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 13 நாள்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார்.
அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
16 நாட்கள் நீடித்த கடைசி அரசாங்க பணி முடக்கம் 2013 இல் நிகழ்ந்தது. -BBC_Tamil