மாலியில் தாக்குதல் – பழங்குடியின மக்கள் 37 பேர் பலி!

மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கி தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

-athirvu.in