சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து தாய்லாந்து வந்து சேர்ந்த 18 வயதுப் பெண் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்த தாய்லாந்து குடியேற்றதுறை அதிகாரிகள் அவர் ஐ.நா. அகதிகள் முகமையின் பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டனர்.
தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர், “ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தாய்லாந்து விமானநிலையத்திலிருந்து புறப்பட்டார்” என கூறி உள்ளார்.
மேலும், “புன்னகையின் நிலம் தாய்லாந்து. இந்நிலம் யாரையும் சாக அனுப்பாது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ரஹாஃப் வெளியிட்ட ஒரு டிவிட்டர் செய்தியில், ”என்னை அழைத்து போக என் தந்தை வந்திருக்கிறார். இது எனக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஐ.நா. முகமையின் பாதுகாப்பில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் எனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்தது என்ன?
முன்னதாக சனிக்கிழமையன்று பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தினருடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சௌதி அதிகாரிகள் தனது பாஸ்போர்ட்டை பிடித்துவைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் தன்னிடம் ஆஸ்திரேலிய விசா இருப்பதாகவும், தாய்லாந்தில் தங்குவதற்கு தான் விரும்பவில்லை என்றும் ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தெரிவித்தார்.
சட்டத்தை மீறியதற்காக இந்த இளம் பெண்ணை தாய்லாந்து தடுத்து நிறுத்தியதாக செளதி அரேபியா தெரிவித்தது.
பாங்காக்கில் உள்ள சௌதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட் அப்பெண்ணிடம்தான் இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமை துறந்து
பிபிசியிடம் பேசிய அப்பெண், தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ”சௌதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்” என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு ‘இனி இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்று கூறிய அவர் தனது பெயர் மற்றும் அடிப்படை தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.
மேலும் புகலிடம் கோரி உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். -BBC_Tamil