காபோன் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு!

காபோன் நாட்டில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காபோனில், அலி போங்கோ அதிபராக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதற்காக அவர் மொராக்கோ நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அதிபர் நாட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து, ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராணுவத்தில் ஒரு பிரிவினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் தலைநகர் லிப்ரவில்லேவில் உள்ள தேசிய வானொலி நிலையத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள், அங்கிருந்தவர்களை சிறை பிடித்தனர்.

அதனை தொடர்ந்து கிளர்ச்சி ராணுவ வீரர்களுக்கு தலைமை தாங்கிய ஓண்டோ ஒபியாங் கெல்லி என்பவர் நாட்டில், அதிபர் அலி போங்கோவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ‘மறுசீரமைப்பு தேசிய சபை’யின் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக வானொலியில் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வானொலி நிலையத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் வானொலி நிலையத்துக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஓண்டோ ஒபியாங் கெல்லி உள்பட 5 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

-athirvu.in