ஐக்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான அணுவாயுதப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவுக்கான முக்கியமான ஆதரவை, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் வழங்கியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இரண்டு தரப்புகளும், மத்திய பகுதியில் வைத்துச் சந்திக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், சீனாவுக்கான 4 நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, சீன ஜனாதிபதி ஜின்பிங்கைச் சந்தித்தபோதே, இந்த ஆதரவை ஜனாதிபதி ஜின்பிங் வழங்கினாரென, சீன அரச ஊடகம் தெரிவித்தது.
ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகளில், அணுவாயுதமழிப்பே முக்கியமானது. அதில், அணுவாயுதமழிப்பு முழுமையாக நடைபெற்றாலே, வடகொரியா மீதான தடைகளை நீக்கப் போவதாக, ஐ.அமெரிக்கா தெரிவிக்கிறது. மறுபக்கமாக, ஏற்கெனவே இது தொடர்பான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும், எனவே தடைகள் நீக்கப்பட வேண்டுமெனவும், வடகொரியா கோருகிறது.
இவற்றுக்கு மத்தியில், இரண்டு தரப்புகளும் மத்திய பகுதியில் சந்திக்க வேண்டுமெனச் சீன ஜனாதிபதி கூறியிருக்கின்றமை, ஐ.அமெரிக்கா மீதான அழுத்தமாகவே கருதப்படுகிறது.
அதேபோல், சீன அரச ஊடகத்தால் வெளியிடப்பட்ட செய்தியின் படி, “வடகொரியத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளை”, ஜனாதிபதி ஜின்பிங் வரவேற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும், ஐ.அமெரிக்கா மீதான அழுத்தமாகவே கருதப்படுகிறது.
-tamilmirror.lk

























