ரஷ்யாவுக்கு வேலை பார்த்தாரா டிரம்ப்? – விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரகசியமாக ரஷ்யாவுக்காக பணியாற்றினாரா என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணை நடத்தியாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு வெள்ளைமாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் எஃப்.பி.ஐயின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் கோமியை நீக்கிய அதிபர் டிரம்ப் செயல்பாட்டின் மீது எஃப்.பி.ஐயின் மற்ற உயரதிகாரிகள் சந்தேகமடைந்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, டிரம்ப் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற விசாரணை மேற்கொண்டதற்கான எந்த ஆதாரமும், காரணமும் இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“இது அபத்தமான குற்றச்சாட்டு” என்று வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலாளர் சாரா ஹெக்கபீ கூறியுள்ளார்.

“பாரபட்சமாக செயல்பட்டதற்காக எஃப்.பி.ஐயின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி பணிநீக்கம் செய்யப்படடார். அவருக்கு அடுத்த நிலை பதவியை வகித்த பொய்யரான ஆண்ட்ரு அந்த அமைப்பினாலேயே நீக்கப்பட்டார்” என்று சாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, ரஷ்யா உள்ளிட்ட எதிரி நாடுகள் நமக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால், டிரம்ப் ரஷ்யா மீது கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்.”

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யா டொனால்டு டிரம்பிற்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் குறித்து ஏராளமான போலிச் செய்திகளை பரப்பியதோடு, ஹேக்கிங் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்புகளின் விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.

எஃப்.பி.ஐ எதற்காக விசாரணை நடத்தியது?

ரஷ்யாவுக்கு வேலைப்பார்த்தாரா டிரம்ப்? - விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ

எப்.பி.ஐ விசாரணையை ஒரு ஒருங்கிணைந்த புலனாய்வு மற்றும் குற்ற விசாரணை என்று நியூயார்க் டைம்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் வேண்டுமென்றே அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் செயல்பட்டாரா அல்லது “தன்னை அறியாமலேயே மாஸ்கோவின் செல்வாக்கிற்கு அடிபணிந்துவிட்டாரா” என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக அந்நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.

அதுமட்டுமின்றி, எப்.பி.ஐ இயக்குனர் கோமியை பதவியிலிருந்து நீக்கியதில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் குற்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்த விசாரணையின்போது பேசிய ஜேம்ஸ் கோமி, ‘நான் உங்களிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்க்கிறேன்’ என்று டிரம்ப் தன்னிடம் கூறியதாகவும், மேலும் அதிபரின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிலின் மீதான விசாரணையை முடிப்பதற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil