ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது, அந்நாட்டின் புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தால் (எப்.பி.ஐ) விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, எப்.பி.ஐ மீது, கடுமையான விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார். தன் மீதான விசாரணையை மேற்கொள்வதற்காக எந்தக் காரணமோ ஆதாரமோ கிடையாது என, அவர் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு மே மாதத்தில்,
எப்.பி.ஐ-இன் பணிப்பாளராகச் செயற்பட்ட ஜேம்ஸ் கோமியை, அவரது பதவியிலிருந்து ஜனாதிபதி ட்ரம்ப் விலக்கியதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் சார்பில் அவர் செயற்படுகிறாரா என, எப்.பி.ஐ விசாரணை செய்திருந்தது.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, நீதியைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டாரா என்ற குற்றவியல் விசாரணையை ஆரம்பித்த அதேநேரத்தில், நாட்டுக்கான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அவர் உள்ளாரா எனவும் ஆராய்ந்துள்ளது.
எப்.பி.ஐ-இன் இந்த விசாரணை, அதன் பின்னர் தொடர்ந்த, விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரின் பரந்தளவு விசாரணைகளுக்குள் உள்ளடங்கியுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த சந்தேகம், 2016ஆம் ஆண்டு வேட்பாளராக அவர் இருந்த போதிருந்து, எப்.பி.ஐ-க்குக் காணப்பட்டது எனவும், ஆனால், எப்.பி.ஐ-இன்
பணிப்பாளர் கோமி நீக்கப்படும் வரை, அது தொடர்பில் எப்.பி.ஐ ஆராயாமல் தவிர்த்தது எனவும் வெளிப்படுத்தப்பட்டது.
இச்செய்தியைத் தொடர்ந்து, தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், அவ்விடயத்தை இப்போது தான் அறிந்துகொண்டதாகத் தெரிவித்ததோடு, தன் மீதான விசாரணைகளை மேற்கொண்டவர்கள், ஊழல்வாதிகள் என, எவ்வித ஆதாரங்களையும் வெளிப்படுத்தாது கூறினார். அத்தோடு, ஜேம்ஸ் கோமியின் தலைமைத்துவம் மோசமானது எனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக எப்.பி.ஐ, பாரிய குழப்பங்களுக்குள் காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.
-tamilmirror.lk