பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்.

ஒரு முக்கியமான சட்டமுன்வரைவு மீதான விவாதத்தின்போது அவைத் தலைவர் -கட்சிக்கு ஒருவராக- மூன்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் (பெர்மாத்தாங் பாவ்-பிகேஆர்), லிம் குவான் எங்(பாகான்-டிஏபி), அப்துல் ஹாடி ஆவாங்(மாராங்-பாஸ்) ஆகிய மூவருக்கு மட்டுமே  அதன்மீது பேச அனுமதி அளிக்கப்பட்டது. 

மக்களவையில் அப்துல் ஹாடி பேசி முடித்து இப்ராகிம் அலி (சுயேச்சை) பேசத் தொடங்கியதும் பக்காத்தான் எம்பிகள் வெளிநடப்புச் செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பக்காத்தான் எம்பிகள் அவைத்தலைவரின் முடிவைச் சாடினர். அது அநியாயம் என்று குறிப்பிட்ட ஷா ஆலம் எம்பி அப்துல் காலிட் சமட், பக்காத்தான் எம்பிகள் அதன்மீதான வாக்களிக்கப் போவதில்லை என்றார்.

செர்டாங் எம்பி தியோ நை சிங், பக்காத்தான் பிரதிநிதிகள் மூவருக்கு மட்டுமே  பேச அனுமதி  அளிக்கப்பட்டது நியாயமல்ல என்றார்.

“கல்வி அமைச்சுக்கான 2012 விநியோக மசோதா குழுநிலையில் விவாதத்துக்கு வந்தபோதே 42 எம்பிகள் அதன்மீது வாதமிட்டனர். அவர்களில் பாதிப்பேர் பக்காத்தானைச் சேர்ந்தவர்கள்”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.