சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர்.
ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்ற அந்நபருக்கு கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியது.
தற்போதைய மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
”இது மிகவும் கொடுமையானது, துரதிர்ஷ்டவசமானது. இதயத்தை நொறுக்கும் விதமாக உள்ளது” என்று நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராபர்டின் உறவினரான லாரி நெல்சன்-ஜோன்ஸ் இ-மெயில் மூலமாக பிபிசியிடம் தெரிவித்தார்.
”இதனால் நாங்கள் மிகவும் அச்சப்பட்டு கொண்டிருந்தது நடந்துவிட்டது. இந்த சூழல் நாங்க எப்போதும் கற்பனை செய்யாத ஒன்று” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மரண தண்டனை விதித்த சீன நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில், ”ஓர் அரசாக இந்த தீர்ப்பு மற்றும் சூழல் எங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சீனா எங்கள் நாட்டை சேர்ந்தவருக்கு மரண தணடனை விதித்துள்ள நிலையில், இது எங்கள் தோழமை நாடுகளுக்கும் கவலை அளிப்பதாக அமைகிறது” என்று ட்ரூடோ கூறியுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராபர்ட்க்கு 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ராபர்ட் மேல்முறையீடு செய்வார் என்று அவரின் வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன பெருநிறுவனமான ஹுவாவேயை சேர்ந்த ஒரு முக்கிய அதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, எதிர்பாராத விதமாக ராபர்ட் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2014-இல் 36 வயதான ராபர்ட் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 227 கிலோ எடையுள்ள போதைபொருளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பரில் இது தொடர்பாக அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தாலியன் நகரை சேர்ந்த ஒரு உயர் நீதிமன்றம் அவருக்கு திங்கள்கிழமையன்று மரண தண்டனை விதித்தது. -BBC_Tamil

























