பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி – அரசுக்கு ஆபத்து?

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.

வரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்களித்த எம்.பி.க்கள் எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர்.

தற்போது பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது தொழிலாளர் கட்சி தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள சூழலில், இது பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும்.

இதனிடையே புதன்கிழமை மாலை 1900 (ஜிஎம்டி) மணிக்கு இது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இந்த தோல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்ட பிரிட்டன் பிரதமர் தெரீசா மே இது மிக பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

பிரெக்ஸிட்

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் மக்களிடம் கருத்தறிந்து முடிவு எடுக்கப்பட்டது.

அப்போதிருந்து, வெளியேறுதலுக்கான நடவடிக்கைகளின் விவரங்களில் ஒப்புதல் ஏற்படுத்துவதற்காக கடினமான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை
இலங்கை

ஆனால், தன்னுடைய எண்ணத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தை ஏற்கச் செய்யலாம் என்று கருதி, இறுதியில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, நாடாளுமன்றத்தில் டிசம்பர் 11-ல் வாக்கெடுப்பு நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார்.

மற்ற கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து, தனது கட்சி எம்.பி.க்கள் பலரும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், இதற்கு வெற்றி கிடைக்காது என்று பிரதமருக்குத் தெளிவாகிவிட்டதால் அப்போது வாக்கெடுப்பு கைவிடப்பட்டது

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று இது தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதனிடையே பிரதமர் தெரீசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான விவாதமும், வாக்கெடுப்பும் பிரிட்டன் அரசியலில் கட்சி பாகுபாடுகளை கடந்துள்ளது.

பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி- அரசுக்கு ஆபத்து?

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் வாக்களித்தது போல பிரதமர் தெரீசா மேவின் சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்களும் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 118 கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அதேபோல் இயான் ஆஸ்டின் உள்ளிட்ட தொழிலாளர் கட்சியை சேர்ந்த 3 எம்பிக்கள் பிரதமரின் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil