வெனிசுலாவில் அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தின் சபா நாயகரான ஜுவான் கெய்டோ என்பவரைக் கைது செய்து விடுவித்துள்ளது.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 10 ஆம் திகதி சுப்ரீம் கோர்ட் முன்னிலையில் 2 ஆவது முறையாகவும் அதிபரானதற்கு கடும் முட்டுக் கட்டையாக நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செய்து வரும் எதிர்க் கட்சியினரும், சபா நாயகரும் விளங்கியதால் தான் அதிபர் இதற்கு உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.
ஏற்கனவே மதுரோ பதவியேற்றது செல்லாது என்றும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் தான் நாடாளுமன்ற சபா நாயகரான ஜுவான் கெய்டோ தான் அதிபர் பதவிக்குத் தயாராக வருவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்து சில மணித்தியாலங்களுக்குப் பின்பு விடுவித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல் என அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு சர்வதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையேயான 2 ஆவது சந்திப்பு வியட்நாமில் நடக்க ஏற்பாடாகி வருவதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக டிரம்பின் வெள்ளை மாளிகைக் குழு பாங்கொக் மற்றும் ஹனோய் ஆகிய இரு நகரங்களையும் பரிசோதித்து ஹனோய் நகரத்தை விட வியட்நாமின் டாநாங் நகரைப் பரிசீலனை செய்துள்ளது. மேலும் பெப்ரவரி மத்தியில் இவர்கள் இருவரும் சந்திக்கலாம் என்றும் தெரிய வருகின்றது.
-4tamilmedia.com