காங்கோ ஜனநாயக குடியரசு தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்படுகிறதா?

காங்கோ ஜனநாயக குடியரசின் தேர்தல் வெளியீடுகளில் “தீவிர சந்தேகங்கள்” இருப்பதாக கூறியுள்ள ஆப்பிரிக்க யூனியன், இறுதி முடிவுகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

தேர்தல் வெளியீடுகள், எதிர்கட்சி வேட்பாளர் ஃபெலிக்ஸ் ஷிகெடி வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கும் நிலையில், தற்போதைய நிர்வாகம் சார்பாக நின்ற வேட்பாளர் மார்டின், தாம் வெற்றி பெற்றதாக கூறுகிறார்.

வெளியேறவிருக்கும் அதிபர் ஜோசஃப் கபிலாவுடன், ஃபெலிக்ஸ் ஷிகெடி அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக மார்டின் ஃபயுலுவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஷிகெடிவின் குழு இதனை மறுத்து வருகிறது.

இறுதி முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று வெளிவர இருக்கிறது.

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க யூனியனின் தலைவர்கள் சந்தித்து, சர்ச்சைக்குரிய 30 டிசம்பர் வாக்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

ஃபெலிக்ஸ் ஷிகெடி
ஃபெலிக்ஸ் ஷிகெடி

“தேசிய சுதந்திர தேர்தல் ஆணையம் அறிவித்த தற்காலிக முடிவுகளை உறுதிபடுத்துவதில் தீவிர சந்தேகங்கள் இருந்தன” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனவே, தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க யூனியன் வலியுறுத்துகிறது.”

தேர்தல் ஆணையம் என்ன செய்யலாம்?

இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட்டால், 1960ஆம் ஆண்டில் பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ ஜனநாயக குடியரசில் முதல் முறையாக அதிகார மாற்றம் ஏற்படும்.

ஷிகெடி 38.5 சதவீத வாக்குகளும், ஃபயுலு 34.7 சதவீத வாக்குகளும், ஆளும் கூட்டணியின் வேட்பாளரான இமானுவேல் ஷதரி 23.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எனினும், 18 ஆண்டுகளாக அலுவலகத்தில் இருக்கும் அதிபர் கபிலாவுடன், ஷிகெடி ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஃபயுலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுபடியும் வாக்குகளை எண்ண வலியுறுத்தி கடந்த சனிக்கிழமையன்று அரசமைப்பு நீதிமன்றத்தில் ஃபயுலு மேல்முறையீடு செய்துள்ளார்.

நீதிமன்றம் மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று ஷிகெடின் வெற்றியை உறுதிப்படுத்தலாம், அல்லது வாக்குகள் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிடலாம் அல்லது, முடிவுகளை ரத்து செய்து புதிய தேர்தல் நடத்த உத்தரவிடலாம். -BBC_Tamil