“அரசாங்கம் அந்த பொதுக் கூட்ட மசோதாவை அவசரம் அவசரமாக நிறைவேற்ற முயலுகிறது”

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தன்னிடம் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டு அவசரம் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயலுவதாகத் தோன்றுகிறது என எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார்.

அவர் அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அரசாங்கம் வெகு வேகமாக அதனை நிறைவேற்ற முயலுவதைப் பார்க்கும் போது பர்மிய இராணுவ ஆட்சியாளர்களைக் காட்டிலும் பரபரப்பு அடைந்துள்ளதாகத் தோன்றுகிறது என்றார் அன்வார்.

“அந்த மசோதாவை மீட்டுக் கொண்டு அதனை மறு ஆய்வு செய்யவும் மற்றவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்குமாறு நான் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள் கூட எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி-யுடன் பேச்சு நடத்துகிறது.

“மலேசியாவில் பெரும்பான்மையினர் மக்கள் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் நீண்ட விவாதங்கள் இல்லாமல் அடக்குமுறையைப் பயன்படுத்துகின்றனர்.”

“நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்பு அது விவாதிக்கப்படாவிட்டால் எதிர்த்தரப்பினர் அதனை ஆதரிப்பது சிரமம்,”  என அன்வார் மக்களவையில் கூறினார்.

அமைதியான பொதுக் கூட்டங்களை ஒடுக்கும் நாடுகளில் ஊழல் நிறைந்த தலைவர்களே ஆட்சி புரிவதை அண்மைய உலக நிகழ்வுகள் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“துருக்கி இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த போது அமைதியான கூட்டங்களை கண்டு அதன் அரசாங்கம் அஞ்சியது. பொதுக் கூட்டங்கள் வன்முறையைக் கொண்டு ஒடுக்கப்பட்டன.”

“சட்டப்பூர்வமான அரசாங்கம் மக்களைக் கண்டு எப்போது அஞ்சுகிறது ? ஊழலை அது மறைக்க முயலும் போதுதான்,” என்றார் அன்வார்.

எதிர்க்கட்சிகளும் மக்களும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மசோதாவுக்கு பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் அந்த மாற்றங்கள் போதாது என அவர் சொன்னார்.

சர்ச்சைக்குரிய அந்த மசோதா இன்று இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் அது முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்டது. இப்போது விவாதிக்கப்படும் அந்த மசோதா குழு நிலைக்கு அனுப்பப்படும்.