பிப்ரவரி இறுதிக்குள் நடைபெறும் 2வது உச்சி மாநாட்டில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் இருந்து கொண்டு வந்த கடிதத்தை கிம் ஜாங்-சோல் டிரம்பிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
புதிய உச்சி மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்படவில்லை. வியட்நாமில் இது நடைபெறலாம் என்று அனுமானங்கள் நிலவுகின்றன.
கிம் ஜாங்-சோல் அமெரிக்கா சென்றிருப்பது பல மாதங்களாக வட கொரியாவோடு நடத்தி வரும் அணு ஆயுத ராஜதந்திரத் நகர்வின் முதல் அறிகுறி என்று பிபிசியின் செய்தியாளர் பார்பரா பிளேட் தெரிவித்திருக்கிறார்.
கிம் ஜாங்-உன் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால், இன்னொரு உச்சி மாநாட்டுக்கு இது வித்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த சந்திப்பை மிகவும் எதிர்பார்த்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
- அமெரிக்கா வந்துள்ள முக்கிய வட கொரிய அதிகாரி: மீண்டும் டிரம்ப் – கிம் உச்சிமாநாடு?
- சிங்கப்பூர் சந்திப்பில் டிரம்ப்க்கு பரிமாறப்பட்ட அறிமுகமில்லாத உணவுகள்
வெள்ளை மாளிகை கூட்டத்திற்கு பின்னர், அணு ஆயுத பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தொடர்ந்தது என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ், “வட கொரியா மீதான அழுத்தங்களையும், தடைகளையும் அமெரிக்கா தொடரும்” என்று தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த கிம் யோங்-சோல்?
முன்னாள் உளவுப்படை தலைவரான ராணுவ ஜெனரல் கிம் யோங்-சோல், வட கொரிய தலைவர் கிம்மின் வலது கரமாக வர்ணிக்கப்படுகிறார்.
தற்போது அமெரிக்காவுடனான வட கொரியாவின் பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டின் சார்பாக பங்கேற்கும் முக்கிய பிரதிநிதியாக இவர் உருவாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் கிம் யோங்-சோல், 2010 ல் ராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தென் கொரிய போர்க்கப்பல்களின் மீதான வட கொரியாவின் தாக்குதல் திட்டங்களில் பின்புலமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
- டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
- சிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வாஷிங்டனுக்கு கிம் யோங்-சோல் சென்றிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரலாற்று பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் டிரம்ப்பை சந்தித்து வட கொரியாவின் சார்பாக ஒரு கடிதம் அளித்தார் .
கடந்த உச்சி மாநாட்டிற்கு பிறகு நடந்தது என்ன?
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பெரிதாக ஒன்றும் ஒப்பு கொள்ளப்படவில்லை. எனவே, வெற்றி என்று சொல்லி கொள்ள எதுவும் இல்லை.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. வட கொரியாவின் அணுஆயுத திட்டங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தடைகளும் நீடித்து வருகின்றன.
- வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு
- டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இந்நிலையில், கிம் ஜாங்-உன் தனது பிம்பத்தை உலக அளவில் பிரபலபடுத்தி வருகிறார். தென் கொரியாவோடு உறவுகளை மேம்படுத்தினார். பலத்த பாதுகாப்புக்குரிய ராணுவம் இல்லாத மண்டலம் நெடுக இருந்த பாதுகாப்பு நிலைகளை இரு நாடுகளும் அழித்துவிட்டன. இரு தலைவர்களும் மாறி மாறி அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வட கொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவும் மேம்பட்டுள்ளதாக தோன்றுகிறது. கிம் ஜாங்-உன் பல முறை பெய்ஜிங் சென்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் சாதித்தது என்ன?
இந்த உச்சி மாநாடு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உண்மையிலேயே அமைந்து விட்டது. ஆனால், எல்லாமே ஆவண நிலையில்தான் உள்ளன.
இரு நாடுகளும் அணு ஆயுத ஒழிப்புக்கு வேலை செய்யதாக ஒப்புக்கொண்ட தெளிவற்ற ஒப்பந்தம்தான் இதன் மூலம் கிடைத்தது.
எத்தகைய அணு ஆயுத ஒழிப்பு என்பது பற்றி இது தெளிவாக தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு எந்த காலக்கெடு, விவரங்கள் அல்லது சோதித்து அறியும் செயல்திட்டம் எதுவும் வழங்கப்படவில்லை.
2வது உச்சி மாநாடு நிகழுமானால், அதிலிருந்து மேலும் உறுதியான நடவடிக்கைகள் வர வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பர். ஆனால், அமெரிக்காவும், வட கொரியாவும் இன்னொரு தெளிவற்ற ஒப்பந்தத்தை ஒரு வெற்றியாக எடுத்துக்கொள்ள போவதில்லை என தெரிகிறது. -BBC_Tamil