சூடான் போராட்டம்: சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சுட்டுத்தள்ளும் அரசு

சூடானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மருத்துவர்கள், ஒரு முக்கிய சக்தியாக இருந்து வந்தாலும், அதற்கான விளைவுகளையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

வியாழக்கிழமையன்று தலைநகர் கார்டூமில் நடந்த போராட்டங்களுக்கு இடையே பாதுகாப்பு படையினர் மருத்துவர் ஒருவரை கொன்றுவிட்டதாக, அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அந்நாட்டின் பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில், தற்போது நீண்ட கால அதிபராக இருக்கும் ஒமர் அல்-பஷீரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

பிபிசி நீயூஸ்டே புரோக்ராமிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர், அவருடன் பணிபுரிந்த மருத்துவர் கொல்லப்பட்டது, அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் இலக்காக மாறியிருப்பதாக அவர்கள் ஏன்நினைக்கிறார்கள் என்பது குறித்து விளக்குகிறார்.

அது சூடானுக்கு இது மிகவும் வருத்தமான நாள். குறிப்பாக மருத்துவர்களுக்கு. தனது பணியை செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கார்டூமின் நடுவே இருக்கும் ராயல் கேர் மருத்துவமனைக்கு அருகில், காயமடைந்தவர்களுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்தார்.

அந்த மருத்துவருடன் மருத்துவமனைக்கு வந்த சிலர் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறினார்கள்.

சூடான்

புரி என்ற இடத்தில் ஒரு வீட்டில் சில போரட்டக்காரர்களுடன் அந்த மருத்துவர் சிக்கியிருந்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவர் முயன்றபோது, சில காவல் படைகள் அவர்களை வெளியே வரச் செய்வதற்காக வீட்டினுள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இதனால் அவர்களால் வீட்டினுள் இருக்க முடியவில்லை. எனவே அந்த மருத்துவர் துணிச்சலான முடிவு ஒன்றினை எடுத்தார்.

வீட்டின் கதவை திறந்து தனது கைகளை உயர்த்தியவாறு மெதுவாக வெளியே சென்று, அவர்களிடம் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டது ஆச்சரியம் அளித்தது. “சரி. நீங்கள் எங்களை நோக்கி வாருங்கள். நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்” என்றனர்.

காவல் படைகளிடம் அவர் நெருங்கிச் சென்றபோது, தான் ஒரு மருத்துவர் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு அவர்கள், “நீங்கள் மருத்துவரா, உங்களைதான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்” என்று கூறினர். உடனே இரண்டு அடி பின்னால் சென்று, அவரைச் சுட்டுவிட்டனர்.

சூடான்

அந்த மருத்துவரைக் கொன்றது கொடூரமாக இருந்தது. அவர்கள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவரை சுட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். மிகவும் வருத்தமான சூழலாக அது இருந்தது.

மருத்துவர்களாக எங்கள் வாழ்வு அபாயத்தில் உள்ளதாக நாங்கள் உணர்கிறோம்.

எப்போதெல்லாம் நாங்கள் மக்களுக்கு உதவுகிறோமோ, நாங்கள் தெருக்களில் போகும்போது, அல்லது தினசரி வேலைகளை செய்யும் போதோ, எந்த காவல்துறையினர் அல்லது தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் நாங்கள் மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ள வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களை கொலை செய்ய முயற்சி நடந்து வருகிறது.

தேசிய அளவிலான போராட்டங்களை தற்போது மருத்துவர்கள் வழிநடத்துவதால், இந்த நடவடிக்கை. மக்கள்தான் இந்த போராட்டத்தை தொடங்கினார்கள். ஆனால், காவல்துறையினர் வன்முறையை கையாளும்போது, மருத்துவர்கள் அதற்கு எதிராக எழுகின்றனர்.

சூடான்

மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்:

•பாதுகாப்பு அதிகாரிகளிடம் தான் மருத்துவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

•கண்ணீர் புகை மற்றும் வெடிகுண்டுகள் மூலம் மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளதாக சூடான் மருத்துவ அமைப்பு கூறியுள்ளது.

•காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறிய தனியார் மருத்துவமனை பொது மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

•சூடான் மருத்துவ அமைப்பில் அதன் தலைவர்கள் உள்ளிட்ட குறைந்தது 11 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

•டிசம்பர் 25ஆம் தேதியன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, கழுத்தில் சுடப்பட்ட மருத்துவ மாணவர் ஹசன் ஒமர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என பிரிட்டன் மருத்துவ ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

•அதே நாளில் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சபீர் மொஹமத் அஹமத் சுடப்பட்டார்.

சூடான் நாட்டை பொறுத்தவரை, மருத்துவர்கள் நன்கு மதிக்கப்படுவார்கள். படித்தவர்களாகவும், அறிவாற்றல் மிக்கவர்களாகவும் கருதப்படுவார்கள்.

ஆனால், தற்போது நாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாக ஆகிவிட்டோம்.

எங்களுக்கு மிரட்டல் வருவது தெரிந்திருந்தாலும், மருத்துவர்களாக நாங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய உள்ளது. எங்கள் வேலை தொடர்ந்து செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். -BBC_Tamil