சாவேஸ் நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆதரவு தெரிவித்த அமெரிக்கா

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி தோன்றுகின்றன. நிலையற்ற தன்மையும், ஜனநாயக சிக்கல்களும் அவ்வப்போது எழுகின்றன.

இந்நிலையில், அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் அரசை கவிழ்க்கும் முயற்சியாக புதன்கிழமை நடைபெறும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா வெளிப்படையாக தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

1958ம் ஆண்டு வெனிசுவேலாவின் ராணுவ சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த 61வது ஆண்டை குறிப்பதாக இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தேசிய பேரவையின் தலைவர் குவான் குயெய்டோ, “மக்களுடனான வரலாற்று சந்திப்பு” என்று இதனை தெரிவித்திருக்கிறார்,

இந்த போராட்டத்திற்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில்’ இது பற்றி கருத்து எழுதியுள்ள மைக் பென்ஸ் “இந்த தேசிய பேரவையையும், குயெய்டோவையும் ஆதரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நிக்கோலாஸ் மதுரோவுக்கு அரசதிகாரத்தில் உரிமையில்லை. அவர் வெளியேற வேண்டும்” என்று பென்ஸ் எழுதியுள்ளார்,

மைக் பென்ஸின் தலையீட்டை நிராகரித்துள்ள வெனிசுவேலாவின் துணை அதிபரான டெல்சி ரொட்ரீகெஸ், “யாங்கீ கோ ஹோம்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் முழங்கினார்.

புதிய தேர்தல்களுக்கு முன்னால் தற்காலிக நிர்வாகத்தை நிறுவுகின்ற குயெய்டோவின் முயற்சிக்கு எதிரணியினர் ஆதரவு அளிக்கின்றனர்.

இந்த எதிரணியின் பேரணிக்கு போட்டியாக போராட்டம் நடத்தப்போவதாக ஆளும் சோசலிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.

தலைநகரான கெராகாஸிலுள்ள பாதுகாப்பு நிலை ஒன்றில் அரசுக்கு எதிராக 27 தேசிய பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி செய்யததாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 நாட்களுக்கு பின்னர் இந்த புதன்கிழமை போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஆயுதங்களை திருடுவதற்கு சாக்குப்போக்கு என்று கூறி அரசு அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

திங்கள்கிழமை படையினரிடம் பேசுகையில், ஆளும் அரசுக்கு பணிபுரிய மறுப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று குயேய்டோ அறிவித்தார்.

போராட்டம்

“நாங்கள் ஆட்சிக்கவிழ்ப்பை தொடங்க நாங்கள் உங்களை கேட்கவில்லை. நீங்கள் சுட வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை. நீங்கள் எங்களை சுட வேண்டாம் என்று கேட்கிறோம்” என்று அவர் பேசியுள்ளார்.

இந்த மாதத்தில் மதுரோ அதிபர் பதவியில் 2வது முறையாக பதவியேற்ற பின்னர், குயெய்டோ இந்த போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி புறக்கணித்த 2018ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலில், நிக்கோலாஸ் மதுரோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச நாடுகள் இதனை கண்டித்திருந்தன.

இலங்கை
இலங்கை

மதுரோவை நீக்கிவிட்டு, தேர்தலுக்கு முன்னால் தற்காலிக அதிபராக பணிபுரிய குயெய்டோ விரும்புகிறார்.

குயெய்டோ குற்றம் செய்துள்ளாரா என்று புலனாய்வு மேற்காள்ள வெனிசுவேலா உச்ச நீதிமன்றம் அரசுத் தரப்பு வழக்கறிஞரை கேட்டுள்ளது.

2014ம் ஆண்டு எண்ணெய் விலை குறைந்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆழமானதால், சமீப ஆண்டுகளில் மில்லியன்கணக்கானோர் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர். -BBC_Tamil