“பினாங்கு சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்கு பண உதவி”

பினாங்கில் உள்ள சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு 60 ரிங்கிட் நிதி உதவி கோரினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் 100 ரிங்கிட் வழங்க மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது.

மாநில அரசாங்கம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் வழங்க முன் வந்ததை நிராகரித்த சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்கு அந்தத் தொகையை வழங்க முன்வருமாறு சுற்றுலாவுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்  டேனி லாவ் ஹெங் கியானுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பணித்துள்ளார்.

என்றாலும் குறிப்பிடப்பட்ட சாலைகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஜார்ஜ் டவுனில் கார்கள் இல்லாத நாளில் சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் முழுமையாகப் பங்கு கொண்டால் மட்டுமே அந்தத் தொகை வழங்கப்படும் என லிம் சொன்னார்.

டிசம்பர் 11ம் தேதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் கார்கள் இல்லாத நாளை அனுசரிக்க கடந்த மூன்று மாதங்களாக பினாங்கு நகராட்சி மன்றத்துடன் ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் சொன்னார்.

குறிப்பிடப்பட்ட சாலைகளில் அன்றைய தினம் மோட்டார்களில் ஒடும்  வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது. சைக்கிள்களும் சைக்கிள் ரிக்சாக்களும் மட்டுமே செல்ல முடியும்.

“அந்த ஏற்பாட்டினால் சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்குக் கூடுதல் வருமான ஆதாரம் திறக்கப்பட்டுள்ளது,” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

“உண்மையான சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் மட்டுமே பயன் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, அவர்கள் தங்களை பினாங்கு சுற்றுலாத் துறையுடன் பதிந்து கொள்ள வேண்டும் என மாநில அரசாங்கம் பரிந்துரைக்கும்.”

“அத்தகைய பசுமை முயற்சி இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுவது முதன் முறை என வருணிக்கப்பட்டுள்ளது. கார்கள் இல்லாத நாள் அனுசரிக்கப்படுவதால் கரியமில வாயு அளவு குறைவதுடன் சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் போன்ற குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுடைய வருமானமும் கூடும்.”

போனஸ் தொகை

நேற்று பினாங்கு சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் சங்கம் மாதம் ஒன்றுக்கு 60 ரிங்கிட் உதவித் தொகையைக் கோரியது.

அதன் விளைவாக இன்று கொடுக்கப்படவிருந்த உதவித் தொகையை மாநில அரசாங்கம் தள்ளி வைத்தது.

நிதி உதவியைப் பெறத் தகுதி பெறுவதற்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிக்கப்பப்பட்ட இடங்களில் சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் இருப்பது அவசியம் என்றும் லிம் சொன்னார்.

வாரம் ஒன்றுக்கு மாநில அரசாங்கம் ஒவ்வொரு ஒட்டுநருக்கும் 20 ரிங்கிட்டை மாநில அரசாங்கம் வழங்கும். அத்துடன் அவர்கள் கலந்து கொள்ளும் ஒவ்வொரு ‘கார் இல்லாத நாளுக்கும்’ 20 ரிங்கிட் போனஸும் கொடுக்கப்பட்டும்.

“சுற்றுப்பயணிகளுக்காக குறிக்கப்பட்ட இடங்களில் சைக்கிள் ரிக்சாக்கள் இருப்பதும் உண்மையான சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் மட்டும் அந்தத் திட்டத்தினால் பயனடைவதும் உறுதி செய்யப்படும்,” என்றார் லிம்.

TAGS: