வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதை அமெரிக்கா ஆதரித்துள்ளது. குவான் குவைடோவை நாட்டின் தலைவராக அங்கீகரிப்பதாகவும், பிற நாடுகளும் இப்படிச் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை பிடுங்கப்பார்ப்பதாக கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.
குவைடோ இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதை ஆதரிப்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், ரத்தம் சிந்துவதற்கான நேரடிப்பாதை என்றும் கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.
இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோஃப், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏதோ சாக்குப் போக்கு கூறி ஆர்கனைசேஷன் ஆஃப் அமெரிக்கன் ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும், வெனிசுவேலா மீது அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்துவதாக கூறினார். தங்கள் நட்பு நாடான வெனிசுவேலாவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் செல்லாது என்பதால், நிக்கோலஸ் மதுரோவை அதிபராக ஏற்க முடியாது என்றும், அதிபர் இல்லாத நிலையில் இடைக்கால அதிகாரத்தை எடுத்துக்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 233 மற்றும், 333 வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார் ச்வான் குவைடோ தெரிவித்துள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு நாடுகள் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன.
தென்னமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா, சிலி, பெரு, ஈக்வடார், அர்ஜன்டினா, பராகுவே மற்றும் கனடா ஆகியவை குவைடோ-வை அங்கீகரித்துள்ளன. ஜனநாயக முறையில் அங்கு தேர்தல் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங். வெனிசுவேலாவில் தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லை என்றும், அமெரிக்காவுடன் மதுரோ தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டது ஏற்க முடியாதது என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ, பொலிவியா, கியூபா ஆகியவை மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. “சகோதரர் மதுரோ, துணிந்து நில்லுங்கள், நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.
வெனிசுவேலாவில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள சீனா, அங்கு வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.
2013ல் பொறுப்பேற்ற மதுரோ
அதிபர் ஹ்யூகோ சாவேஸ் மறைவை அடுத்து 2013-ல் அதிபர் பதவியேற்ற மதுரோ, மே மாதம் நடந்த தேர்தல் முடிவுகளை ஒட்டி இந்த மாதம் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்ததுடன், வாக்குப் பதிவு முறைகேடுகள் நடந்ததாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. -BBC_Tamil