சிறந்த வாழ்க்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் – என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகின் சிறந்த நாடு எது?

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாமிடத்தையும், சென்ற ஆண்டைவிட ஓரிடம் பின்தங்கி கனடா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா எட்டாவது இடத்தையும், சிங்கப்பூர் 15வது இடத்தையும், சீனா 16வது இடத்தையும், இந்தியா 27வது இடத்தையும் பெற்றுள்ளது. கல்வி, குடியுரிமை, கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா போன்ற பல்வேறு அளவீடுகளை மையாக கொண்டு இந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள.

சிறந்த வாழ்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் - என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

உப அளவீடுகளை பார்க்கும்போது சாகசம் நிறைந்த நாடுகள் பட்டியலில் பிரேசிலும், சிறந்த குடியுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் நார்வேவும், சிறந்த கலாசார பிரிவில் இத்தாலியும், தொழில்முனைவோருக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் ஜப்பானும், ஆதிக்கம் மிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடாவும் முதலிடத்தை பெற்றுள்ளன.

எதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது?

உலகிலேயே சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு மூன்றாமிடத்தை பெற்றுள்ள கனடா, சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

“செலவினம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஊதியத்தில் பாலின சமவுரிமை, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கனடா, வாழ்க்கை தரத்தில் உலகின் சிறந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த கருத்து கணிப்பு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அனைத்து உப அளவீடுகளிலும் கனடா முதல் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வாழ்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் - என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

கனடா முதலிடத்தை பிடிக்க காரணமென்ன?

தங்களது சொந்த நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களினால் வெளியேறியவர்களுக்கு/ வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நாடாக விளங்கி வரும் கனடாவின் மக்கள் தொகையில் குடியேறியவர்களின் எண்ணிக்கை மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம்.

இந்த பட்டியலின் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளுக்கான பிரிவில் கனடா முதலிடம் பிடித்துள்ளது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “உலகில் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடு இது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கனடியரும் தனது வாழ்க்கையில் வெற்றிப்பெறுவதற்கான உண்மையான, சரிசமமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து உழைப்போம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்துவரும் அஸ்வின் குமாரிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் என்றால் தீவிரவாதம், அமெரிக்கா என்றால் இனவெறி என்று ஒவ்வொரு நாட்டையும் நினைக்கும்போது நமக்கு ஏதாவது ஒன்று தோன்றும். ஆனால், கனடாவை நினைக்கும்போது எதிர்மறையான விடயங்களை தவிர்த்து இயற்கை, சிறந்த வாழ்க்கை போன்றவை நமக்கு நினைவுக்கு வருவதுதான் அதன் சிறப்பிற்கு உதாரணம்” என்று கூறுகிறார்.

“நான் கனடாவிற்கு வந்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகிறது. மக்களின் செயல்பாடு முதல் கல்வி நிறுவனங்களின் தரம் வரை பெரும்பாலான விடயங்கள் என்னை வியக்க வைக்கும் வகையில் உள்ளன” என்று கூறுகிறார் மதுரையை பூர்விகமாக கொண்ட அஸ்வின்.

சிறந்த வாழ்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் - என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

“பேராசிரியரை பார்க்கும் பார்வையே மாறியது”

கனடாவிற்கு சென்றவுடன் தனது முந்தைய கால அனுபவங்கள் பல தலைகீழாக மாறியதாக கூறுகிறார் அஸ்வின். “தமிழ்நாடு அல்லது இந்தியாவை பொறுத்தவரை, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, பாடம் நடத்தும் பெரும்பாலான பேராசிரியர்களை பார்த்தால் ‘அவருக்கு என்ன தெரியும்?’ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது.

ஏனெனில், நம்மூரில் இளங்கலை பட்டம் பெறுபவர்கள் வேலை கிடைக்கவில்லை என்றால் முதுகலை பட்டத்திற்கு படிக்கிறார்கள், அப்படியும் வேலை கிடைக்கவில்லை என்றால் அதே கல்லூரில் ஆசிரியர்களாக சேர்ந்துவிடுகிறார்கள். இது கனடாவில் ஒரு சதவீதம் கூட சாத்தியமில்லை.

கனடாவை பொறுத்தவரை, இளங்கலை படித்துவிட்டு பணியில் சேர்ந்து, அதில் முன்னேற்றம் தேவைப்படுபவர்களே முதுகலை படிக்கிறார்கள். பணியில் கோலூச்சி, அனுபவம் பெற்று வெற்றி பெற்ற பிறகு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட பிறகே பேராசிரியராகிறார்கள். இவ்வாறாக தனக்கு சம்பந்தப்பட்ட துறையில் வல்லுநராக உள்ளவர்களே பாடம் கற்பிக்கும் கனடாவின் கல்வித்துறை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.

அஸ்வின் குமார்
அஸ்வின் குமார்

அதேபோன்று, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நிரந்தர வேலையை பெற்றுவிட்டால், சட்டரீதியான காரணம் ஏதுமின்றி உங்களை பணியிலிருந்து வெளியேற்றுவது என்பது முடியாத காரியம். நமது ஊரில் தலை வலிக்கு மருத்துவரிடம் போனால், சம்பந்தமே இல்லாமல் கிட்னியை ஸ்கேன் செய்ய சொல்லுவதெல்லாம் இங்கு நடப்பதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் மருத்துவம் பெறுவதற்கு அரசாங்கம்தான் நேரடியாக மருத்துவமனைக்கு பணமளிக்கும். அதில் ஏதாவது குளறுபடி கண்டறியப்பட்டால் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடக்கின்றன” என்று விவரிக்கிறார் அஸ்வின்.

“பொதுவெளியிலுள்ள நீரையும் நம்பி குடிக்கலாம்”

கல்விக்காக கனடாவுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, பணிக்காக சென்று கனேடிய குடியுரிமை வாங்கிய தமிழர்களும் அதிக எண்ணிக்கைகள் இருக்கிறார்கள்.

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த சமையற்கலை நிபுணரான சிவா, தான் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து ஏழாண்டுகளுக்கு முன்பு கனடா வந்ததாகவும், தற்போது கனேடிய குடியுரிமையே வாங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

சிறந்த வாழ்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் - என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

“எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர். சமையற்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவுடன், உள்ளூரில் சில காலம் பணியாற்றிவிட்டு 2012ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்தேன். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பொதுவாக வெப்பத்தை மட்டுமே பார்த்து பழகியவர்கள் என்பதால், கனடாவின் கடும் குளிரால் அவதிப்பட்டேன்.

எனினும், கனடாவில் இருக்கும் வாய்ப்புகளை எண்ணி கடுமையாக உழைத்து முதலில் நிரந்தர வசிப்புரிமையையும், பிறகு கடந்தாண்டு கனேடிய குடியுரிமையையும் பெற்றுவிட்டேன். எனது வேலை மட்டுமின்றி, குழந்தையின் கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருதும்போது கனடாவிலுள்ள வாழ்க்கை தரம் நம்பிக்கை அளிக்கிறது.

நமது ஊரில் கடைகளில் பிளாஸ்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரைவிட கனடாவின் பொதுவெளியில் காணப்படும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. இயற்கையை அழிக்காமல், மனிதர்களுக்கிடையேயான வேறுபாட்டை கேலிக்குள்ளாக்காமல், கல்வியை மதித்து, சுகாதாரத்தை சேவையாக கருதும் கனடாவுக்கு முதலிடம் கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை” என்று நிறைவு செய்கிறார். -BBC_Tamil