எதிரி நாடுகளை தாக்கி அழிக்க ஏவுகணைகளை தயாரிக்கும் நாடு? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்!

எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் அதிக திறன் வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஆயுத உற்பத்தியில் சவுதி அரேபியா இணைந்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

சவுதி அரேபியா, அணு ஆயுத சக்தி கொண்ட நாடு கிடையாது. ஆனால் சவுதி அரேபியா தயாரிக்கும் இந்த ஆயுதங்கள் எல்லாம் அணு ஆயுத போருக்கு பயன்படும் ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் வெளியாகி உள்ளது!

இந்த ஏவுகணை உற்பத்தி குறித்த சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜெப்ரி லெவிஸ் என்ற அமெரிக்காவை சேர்ந்த அணு ஆயுத ஆராய்ச்சியாளர் இதை கண்டுபிடித்து இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளும் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஏவுகணை உற்பத்தி மையம்தான் என்று கூறுகிறார்கள்.

ஆனாலும் ஏற்றுமதி!

இந்த செய்திகள் காரணமாக ஆயுத ஏற்றுமதியில் சவுதி இறங்குகிறதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த புகைப்படங்களில், சவுதி ஏவுகணைகளை உற்பத்தி செய்வது தெளிவாக தெரிவதாக பல நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதனால் சவுதி ஏவுகணைகளை சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

பிரச்சனை என்ன?

சவுதி நாட்டிடம் அணு ஆயுத பலம் கிடையாது. ஏவுகணைகளை விற்று அதற்கு பதிலாக அணு ஆயுதங்களை சவுதி வாங்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் ஈரானுக்கு எதிராக அவர் இந்த செயல்களை செய்கிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

அதிர்ச்சி!

இது தற்போது வளைகுடா நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக ஈரான் மற்றும் சவுதி இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதில் அமெரிக்கா என்ன மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-eelamnews.co.uk