தம்மைத் தாமே தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
அவரது வங்கிக் கணக்குகளையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுவேலாவின் புகழ்பெற்ற அதிபரான ஹ்யூகோ சாவேஸ் 2013ல் இறந்தவுடன், அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் நிக்கோலஸ் மதுரோ. இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்று இம்மாத தொடக்கத்தில் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால், மே மாதத் தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மதுரோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத்தின் தலைவருமான குவான் குவைடோ, தம்மை தற்காலிகத் தலைவராக அறிவித்துக்கொண்டார்.
போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அவரை தற்காலிக அதிபராக அமெரிக்காவும் வேறு சுமார் 20 நாடுகளும் அங்கீகரித்தன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், அவரை அங்கீகரிக்காவிட்டாலும், புதிதாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தங்கள் நிலையைத் தெரிவித்தன.
- காங்கிரஸ் கூட்டத்தில் மது அருந்திய நிலையில் இருந்தாரா பிரியங்கா?
- புற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்?
அதே நேரம், அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ரஷ்யா, சீனா, துருக்கி மற்றும் சில தென்னமெரிக்க நாடுகள் உள்பட பல நாடுகள் ஆதரிக்கின்றன. வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்று அவை கூறுகின்றன.
இதற்கிடையில், குவான் குவைடோவை தற்காலிக அதிபராக அங்கீகரித்த அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார். அவரை ராணுவம் ஆதரிக்கிறது.
ஆனால், தங்கள் தூதர்களை வெளியேறச் சொல்லும் உரிமை மதுரோவுக்கு இல்லை என்று கூறிய அமெரிக்கா, தங்கள் தூதர்களுக்கோ, குவான் குவைடோவுக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் குறிப்பிடத்தக்கவகையில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். இந்நிலையில்தான் வெனிசுவேலாவின் உச்சநீதிமன்றம் குவைடோ வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே ராணுவம், மதுரோ நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், நீதித்துறையும் குவைடோவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நாட்டில் மதுரோவின் பிடி உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.
இதனிடையே, அமெரிக்கத் தூதர்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட 72 மணி நேர காலக்கெடுவை விலக்கிக்கொண்ட வெனிசுவேலா வெளியுறவு அமைச்சகம், ஒரு மாதத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு நாடு மற்றதில் நல அலுவலகங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.
தூதரக உறவு இல்லாத இரு நாடுகள், அடிப்படையான தொடர்புகளுக்காகவும், தங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்கவும், ஒன்று மற்றொன்றில் அமைத்துக் கொள்வதே நல அலுவலகங்கள் எனப்படும்.
இந்நிலையில் புதன்கிழமை இரண்டு மணி நேர அமைதிப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தமது ஆதரவாளர்களை குவைடோ கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அந்தப் போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
இதனிடையே, வெனிசுவேலாவின் நன்மைக்காக தாம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் நிக்கலோஸ் மதுரோ ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ. நொவோஸ்தியிடம் கூறியுள்ளார்.
“வெனிசுவேலா சிக்கலைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கனடா உள்ளிட்ட 14 நாடுகளைக் கொண்ட லிமா குழு என்ற அமைப்பு வெளி நாடு ஒன்று ராணுவ ரீதியில் வெனிசுவேலாவில் தலையிடுவதை எதிர்ப்பதாக” பெரு வெளியுறவுத் துறை அமைச்சர் நெஸ்டர் போபோலிஜியோ தெரிவித்துள்ளார்.
சிக்கலைத் தீர்ப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளும் கூறியுள்ளனர். -BBC_Tamil