மதுரோவுக்கு எதிராக இராணுவம் திரும்புமா?

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை அவரது பதவியிலிருந்து விலக்குவதற்கு, அந்நாட்டு இராணுவம் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள, தன்னைத் தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துள்ள குவான் குவைடோ, அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில், பத்தியொன்றை எழுதியுள்ள குவைடோ, அதிலேயே இவ்விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

இரண்டு பேர் ஜனாதிபதிப் பதவிக்கு உரிமை கோருகின்ற நிலையில், மேற்குலக நாடுகளால் குவைடோ ஆதரவளிக்கப்படுகிறார். ஆனால், வெனிசுவேலாவின் இராணுவம், மதுரோவுக்கே விசுவாசமாகக் காணப்படுகிறது.

பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்த அவர், அவர்களில் அநேகமானோர், மதுரோவைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்ற கருத்தை வெளியிட்டனர் என்றார்.

“மதுரோவுக்கான ஆதரவை இராணுவம் வாபஸ் பெறுவது, அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமானது. அத்தோடு, அவர்களில் பெரும்பான்மையானோர், நாட்டின் அண்மைக்காலங்களில் நடைபெற்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதன என ஏற்றுக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கடந்தாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலேயே மதுரோ மீண்டும் வெற்றிபெற்றிருந்த நிலையில், சட்டவிரோதமான தேர்தலென அத்தேர்தலை வர்ணித்த குவைடோ, இம்மாதம் 10ஆம் திகதியுடன், மதுரோவின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துவிட்டது எனத் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய சபையின் தலைவராகத் தான் இருப்பதால், அரசமைப்பின் அடிப்படையில், நீதியானதும் வெளிப்படையானதுமான தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம், தனக்கே வருவதாக அவர் தெரிவித்தார். இதனால், இம்மாதம் 23ஆம் திகதி தான் பதவியேற்றமை, “தன்னைத் தானே அறிவித்தார்” என வர்ணிக்கப்பட முடியாது எனத் தெரிவித்த குவைடோ, அரசமைப்புக்கேற்பவே அப்பதவியை ஏற்றதாகக் குறிப்பிட்டார்.

-tamilmirror.lk