அமைதியாகக் கூடுதல் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு மணி நேரம் விவாதித்த பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கிறது. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கிறது. குரல் வாக்களிப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அப்போது பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் அவையில் இல்லை. அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்ட வேளையில் அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்து விட்டனர்.

மசோதா மீதான விவாதத்தில் எதிர்த்தரப்புத் தலைவரும் பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் உறுப்பினருமான அன்வார் இப்ராஹிம், பிஎன் கோத்தா பெலுட் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான், டிஏபி பாகான் எம்பி லிம் குவான் எங், பாஸ் மாராங் உறுப்பினர் அப்துல் ஹாடி அவாங் பாசிர் பாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி, பிஎன் உலு சிலாங்கூர் உறுப்பினர் பி கமலநாதன் ஆகியோர் மசோதா மீதான விவாதத்தில் பேசினார்கள்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய விவாதம் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தது. மசோதா மாலை மணி 4.15 வாக்கில் நிறைவேற்றப்பட்டது.

குழு நிலையில் சமர்பிக்கப்பட்ட திருத்தங்களும் பக்காத்தான் எம்பி-க்கள் இல்லாமல் குரல் வாக்களிப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விவாதத்தின் போது எழுப்பப்பட்ட விஷயங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் பதில் அளித்து விவாதத்தை நிறைவு செய்து வைத்த வேளையில் எதிர்க்கட்சிகள் எம்பி-க்கள் அவையில் இல்லை.

எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாததை கோழைத்தனம் என வருணித்த நஸ்ரி அந்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்றார். காரணம் பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 2 (பி) அனுமதி அளிக்கிறது என்றார் அவர்.