சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா “மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக” ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார்.
சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய நபராக 59 வயதான கஷோக்ஜி பார்க்கப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தன.
- கஷோக்ஜி விவகாரம்: மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
- கஷோக்ஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – செளதி இளவரசர்
ஆனால், இதில் இளவரசர் சம்பந்தப்படவில்லை என்று சௌதி முகவர்கள் சிலர் கஷோக்ஜியை கொலை செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சௌதி, அதில் 5 பேருக்கு மரண தண்டனை கோரி வருகிறது.
பல சௌதி அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களை துருக்கிக்கு வெளியேற்ற சௌதி மறுத்து வருகிறது.
அறிக்கை என்ன கூறகிறது?
பத்திரிக்கையாளர் கஷோக்ஜியின் கொலை குறித்து சர்வதேச மனித உரிமை விசாரணையை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ஜனவரி 28ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3ஆம் தேதிவரை துருக்கிக்கு சென்று பார்வையிட்டார்.
“சௌதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக கஷோக்ஜி கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்று முதல்கட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தக் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சௌதி அரேபியா, கொலை நடந்த இடத்திற்கு செல்ல துருக்கி விசாரணையாளர்களை அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதாக்கியது.
அக்டோபர் 2ஆம் தேதி கொலை நடந்திருக்க, அக்டோபர் 15ஆம் தேதிதான் தூதரகத்திற்குள் நுழைய துருக்கி அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்தது. மேலும், அக்டோபர் 17ஆம் தேதிதான் வீட்டில் சென்று விசாரிக்க முடிந்தது. இது முக்கியமாக தடயவியல் விசாரணையை பாதித்ததாக அவர் அறிக்கையில் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்த “பெரும் கவலைகளை” எழுப்புவதாக ஆக்னஸ் கலாமார்ட் குறிப்பிட்டுள்ளார்.
- ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது எவ்வாறு? – மர்மம் விலகுமா?
- ஜமால் கசோஜி: கொலை செய்யப்பட்டது யாரால்? – செளதி விளக்கம்
“சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சௌதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டிருப்பதாகவும்” அவர் எழுதியுள்ளார்.
ஜமால் கஷோக்ஜியின் உடல் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது, அவரது அன்புக்குரியவர்களை இன்னும் பெரிய துன்பத்தில் வைத்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கை வரும் ஜுன் மாதத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலிடம் சமிர்பிக்கப்படும்.
கஷோக்ஜி வழக்கு – சமீபத்தில் நடந்தது என்ன?
விஷ ஊசி செலுத்தி கஷோக்ஜியை கொலை செய்ய உளவுத்துறை அதகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்ததாக தங்கள் விசாரணையளர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக சௌதியின் துணை அரசு வழக்கறிஞர் ஷலான் பின் ரஜிஹ் ஷலான் கூறியுள்ளார்.
தூதரகத்தினுள் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் வெளியே உள்ள இதில் தொடர்புடைய மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் ஷலான் கூறினார்.
சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட சௌதியின் நிதி அமைச்சர் மொஹமத் அல்-ஜடான் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு முன்பாக, “ஜமால் கஷோக்ஜிக்கு நடந்ததை நினைத்து தங்கள் நாடு மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக” பேசினார்.
இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மற்றும் அங்கிருந்து புறப்பட்ட சௌதி முகவர்கள் 15 பேரை துருக்கி அடையாளம் கண்டுள்ளது.
மேலும், சௌதி இளவரசரின் முன்னாள் ஆலோசகர் சௌத் அல்-கஹ்தானி உள்ளிட்ட 17 சௌதி அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. கஷோக்ஜியின் கொலை திட்டத்தில் அவர்களும் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த 17 பேரில் யாரேனும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
-BBC_Tamil