“சரியான நேரத்தில்” தெரு ஆர்ப்பாட்ட தடை அகற்றப்படும் என்று எதிர்பார்க்கிறார் கைரி

‘அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதிப்பேரணி மீதான மசோதா தெரு ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டுமொத்த தடை விதித்தாலும் இந்தத் தடைவிதிப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை  தமக்கு இன்னமும் இருப்பதாகக் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரெம்பாவ் எம்பியான கைரி இதனைத் தெரிவித்தார்.

“அதற்கு இது சரியான தருணமல்ல என்று அரசாங்கம் நினைக்கிறது போலும். ஆனால், இளைஞர் பகுதி தலைவன் என்ற முறையில், தெரு ஆர்ப்பாட்டத்துக்கு இடமளித்து எதிர்காலத்திலாவது திருத்தம் கொண்டுவரப்படும் என்றே நினைக்கிறேன்”, என்றாரவர்.

சர்ச்சைக்குரிய அம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு மக்களவையைவிட்டு வெளியில் வந்த கைரி, மொத்தத்தில் அம்மசோதா மறுப்புத் தெரிவிக்க போதுமான ஜனநாயக உரிமைகளை வழங்குவதாக கைரி குறிப்பிட்டார்.

மாற்றரசுக் கட்சி எம்பிகள் வெளிநடப்புச் செய்த நிலையில் மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இம்மசோதா வரையறுக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முன் அறிவிப்பு செய்ய வேண்டியதில்லை என்கிறது. அதே வேளை வரையறுக்கப்படாத இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த 10 நாள்களுக்கு முன்னதாக அறிவிக்கை கொடுக்கப்பட வேண்டும்.

மேலும், பள்ளிக்கூடங்கள், பெட்ரோல் நிலையங்கள், அணைக்கட்டுகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை உள்ள இடங்களில் 50மீட்டர் தொலைவுக்குள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது.

முற்போக்கான எண்ணங்கள் கொண்ட இன்னொரு பிஎன் எம்பி, உயர்க்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா அம்மசோதா பற்றிக் கருத்துரைக்க மறுத்தார்.

மக்களவையைவிட்டு வெளிவந்த அவரை அணுகியபோது “அது பற்றிக் கருத்துரைப்பதற்கில்லை”, என்றார்.

இதனிடையே, பிரதமர் துறை துணை அமைச்சர் வி.கே. லியு, மாற்றரசுக் கட்சி எம்பிகள் வெளிநடப்புச் செய்ததன்வழி “அவர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டார்கள்”, என்றார்.

மசோதாவில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் பற்றி அமைச்சர் அளித்த விளக்கத்தைச் செவிமடுக்க அவர்கள் அவையில் இல்லாமல் போனதற்காக அவர்களை அவர் கடிந்துகொண்டார்.

இன்று வழக்குரைஞர் மன்றம் சமர்பித்த மாற்று மசோதா கருத்தில் கொள்ளப்படவில்லையே என்று சுட்டிக்காட்டியபோது அது காலங் கடந்து வந்து சேர்ந்ததாக அவர் கூறினார். “வழக்குரைஞர்கள் நாடாளுமன்ற நடைமுறையை அறிந்தே இருப்பார்கள். இரண்டாவது வாசிப்பின்போது கொண்டு வந்துகொடுத்தால் எப்படி?”, என்றாரவர்.